ஆஷூ மாரசிங்க காணொளி தொடர்பில் ஹிருணிகா பிரேமச்சந்திர நேற்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகர் பேராசிரியர் ஆஷூ மாரசிங்க சம்பந்தப்பட்ட காணொளி தொடர்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர நேற்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்
இதன்போது சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம், தாம் கோரிக்கை விடுத்ததாக பிரேமச்சந்திர கூறினார்.
இந்தநிலையில் ஆஷூ மாரசிங்கவும் தனது முன்னாள் காதலியினால் பகிரங்கப்படுத்தப்பட்ட காணொளி தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சனிக்கிழமை முறைப்பாட்டை செய்திருந்தார்.
அந்த முறைப்பாட்டில், மாரசிங்க, குறித்த காணொளி, செம்மைப்படுத்தப்பட்டது என்றும் தன்னைப் பழிவாங்கும் செயலாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றம் சுமத்தியிருந்தார்.
ஆதர்ஷா கரந்தன என்ற பெண், தமது வளர்ப்பு நாயின் நடத்தையில் சந்தேகமடைந்த நிலையில், மாரசிங்க தனது செல்ல நாயை அவர்களது அறையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்வதை ரகசியமாக காணொளி எடுத்ததாக கூறியிருந்தார்.
மாரசிங்கவுடன் தான் ஓரிரு வருடங்கள் வாழ்ந்து வருவதாக கரந்தனா தெரிவித்திருந்தார்.
தனது தனிப்பட்ட வாழ்க்கையை பகிரங்கப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தனக்கு இல்லை என்றாலும், தனது வளர்ப்பு நாய்க்கு நீதி வேண்டும் என்று கரந்தனா வலியுறுத்தினார்.
இதேவேளை குறித்த காணொளி பகிரங்கப்படுத்தப்படுவதற்கு முன்னர், நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதி ஆலோசகர் பதவியில் இருந்து பேராசிரியர் ஆஷூ மாரசிங்க இராஜினாமா செய்தார்.
காலிமுகத்திடல் போராட்டத்தின் போது மாரசிங்கவுடன் காலி முகத்திடலில் கரந்தனா அடிக்கடி காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



