இன்றைய வேத வசனம் 31.12.2022: உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாயுமிருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுங்கள்
குழந்தைக்கு தாய்ப்பால் எவ்வளவு நன்மையும் அவசியமுமானது என்பது யாவரும் அறிந்த உண்மை.
அந்த களங்கமில்லாத பாலில் குழந்தையின் உடல் வளர்ச்சிக்கு தேவையான தாதுப்பொருட்கள் அடங்கியிருக்கின்றது.
அதே நேரத்தில் புதிதாக பிறந்த குழந்தைகள் இன்ன நேரத்தில் பால் தனக்கு தேவை என்று முன்குறிக்காமல், அதற்கு தேவையான நேரத்தில், சுயமாகவே பாலை அருந்தும்படி வாஞ்சையுள்ளதாக இருக்கும்.
அதே போல தேவனுடைய வார்த்தையே நம்முடைய ஆத்துமாவின் போஜனமாக இருக்கின்றது என்ற உணர்வு நமக்குள் உருவாக வேண்டும்.
அவருடைய தயவை நித்தம் நித்தம் ருசிபார்த்திருக்கும் நாம் யாவரும், வளரும்படி, சகல துர்க்குணத்தையும், சகல வித கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், சகலவித புறங்கூறுதலையும் ஒழித்துவிட்டு, புதி தாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருக்க வேண்டும்.
தேவனுடைய வாழ்வு தரும் திருவசனங்கள் களங்கமில்லாததும் மாசற்றதுமாயிருக்கின்றது. அந்த திருவசனத்திலே, நம்முடைய உள்ளான மனிதன் புதிதாக்கப்பட்டு, கிறிஸ்துவுக்கு ஒத்த சாயல் அடையும்படி வளர்வதற்கு தேவையான வழிமுறைகள் யாவும் அடங்கியுள்ளதாயிருக்கின்றது.
எனவே நித்திய ஜீவனைக் கொடுக்கும் அந்த வார்த்தைகளை குறித்து உங்கள் நிலைப்பாடு எவ் வண்ணமாக இருக்கின்றது என சற்று சிந்தித்துப் பாருங்கள்.
இன்றே, தீர்க்கமான தீர்மானங்களை எடுத்துக் கொள்ளுங்கள். பரிசுத்த வேதாகமத்தை தினமும் படிக்க ஆரம்பியுங்கள்.
உங்களுக்கு கிடைக்கும் ஒய்வு நேரங்களை மற்றய பொழுது போக்குகளால் விரயப்படுத்தாதபடிக்கு அதிகதிகமாக வாசியுங்கள். வசனம் வசனமாக தியானியுங்கள். அந்த வார்த்தையின்படி வாழுங்கள். ஆமென்!!! அல்லேலூயா!!!
ஆகையால், நீங்கள் எல்லாவித அழுக்கையும் கொடிய துர்க்குணத்தையும் ஒழித்துவிட்டு, உங்கள் உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும் உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாயுமிருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுங்கள். #யாக்கோபு 1:21