இலங்கையில் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டால் இரண்டாவது அலை போராட்டத்தை தடுக்க முடியாது! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

மின் கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தால், 2023ல் இரண்டாவது அலை போராட்டத்தை தடுக்க முடியாது என இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டால் அது மிகவும் அநியாயமானது எனவும் அதனை மக்கள் செலுத்த வேண்டாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனையும் மீறி மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டால் மின்வாரிய ஊழியர்கள் மின்தடை செய்ய வரமாட்டார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.
இதேவேளை, 2023 ஜனவரி மற்றும் மே மாதங்களில் இரண்டு தடவைகள் மின்சார கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
எவ்வாறாயினும் உத்தேச மின் கட்டண அறிவிப்பிற்கு தொழிற்சங்கங்கள், பௌத்த பிக்குகள் உள்ளிட்ட மதத் தலைவர்கள், வர்த்தக சமூகம் மற்றும் பிற சிவில் சமூக அமைப்புகள் போன்ற பல தரப்பினரின் எதிர்ப்பு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மின் கட்டண திருத்தம் தொடர்பான புதிய யோசனை இன்றைய தினம் அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.
தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிப்பதனை உறுதிப்படுத்துவதற்காகவும், மின் உற்பத்திக்கான செலவினத்தையும் கருத்திற்கொண்டு மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனால், குறைந்தளவில் மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கு, 2023ஆம் ஆண்டுக்கான உத்தேச மின் கட்டண திருத்தம், அதிக தாக்கத்தை செலுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.
புதிய திருத்தங்களுக்கு அமைய 0 முதல் 60 வரையான அலகுகளுக்கான கட்டணத்தின் கீழ் அலகொன்றிற்கான கட்டணம் உள்ளிட்ட நிலையான கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய 0 முதல் 30 வரையில் அலகொன்றுக்கான 8 ரூபா என்ற கட்டணத்தை 30 ரூபாவாகவும், 120 ரூபா என்ற நிலையான கட்டணத்தை 400 ரூபாவாகவும் அதிகரிக்கப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
31 முதல் 60 வரையில் அலகொன்றுக்கான 10 ரூபா என்ற கட்டணத்தை 37 ரூபாவாகவும், 240 ரூபாவாக காணப்பட்ட நிலையான கட்டணத்தை 550 ரூபாவரையிலும் அதிகரிப்பதற்கு புதிய யோசனையில் முன்வைக்கப்பட்டுள்ளது.
61 முதல் 90 வரையான அலகொன்றுக்கு 16 ரூபாவாக காணப்பட்ட கட்டணம் 42 ரூபாவாகவும், 360 ரூபாவாக இருந்த நிலையான கட்டணம் 650 ரூபா வரையிலும் அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அமைச்சரவையினால் முன்வைக்கப்படும் எந்தவொரு யோசனையையும் பரிசீலிக்க போவதில்லை என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



