இலங்கை அரசாங்கத்தின் மீது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம் - புலனாய்வு பிரிவு வெளியிட்ட தகவல்

இலங்கை அரசாங்கத்தின் மீது மக்களுக்கு ஏற்பட்டிருந்த கடும் அதிருப்தி தற்போது ஓரளவுக்கு குறைவடைந்துள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.
புலனாய்வு பிரிவுகளால் அரச மேல் மட்டத்துக்கு அறிக்கையின் ஊடாக இந்த தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
பொருட்களுக்கான தட்டுப்பாட்டால் ஏற்பட்டிருந்த வரிசை யுகம் கட்டுக்குள் வந்தமை, மின்வெட்டு அமுலாகும் நேரம் குறைக்கப்பட்டமை, உரப்பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை உள்ளிட்ட காரணங்களால் தான் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த கொந்தளிப்பு குறைவடைய ஆரம்பித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும், மின்கட்டணம் அதிகரிப்பு, அடுத்தாண்டு மின்வெட்டு அமுலாகும் என விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை உள்ளிட்ட காரணங்களால் மீண்டும் மக்கள் போராட்டம் வெடிக்கலாம்.
இதற்கான ஏற்பாடுகளை கட்சிகள் முன்னெடுத்துவருகின்றன எனவும் அரச மேல் மட்டத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
அதேவேளை, தற்போதைய சூழ்நிலையில் தேர்தலொன்று நடத்தப்பட்டால் வாக்களிப்புவீதம் குறைவாகவே இருக்குமெனவும், ஜேவிபியின் வாக்கு வங்கியில் எழுச்சி ஏற்படுமெனவும் எனவும் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட சில ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.



