இன்றைய வேத வசனம் 09.01.2023: இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது

ஒரு மனிதன் மேல், அவனுடைய பாவத்தின் கொடூரம் எவ்வளவு அதிகமாயிருந்தாலும், அதைவிட அதிகமாய் கர்த்தருடைய அன்பு, அவன் மேல் இருக்கிறது.
தேவனால் அன்பு செலுத்த முடியாத கொடூரமான பாவி ஒருவரும் இல்லை. ஏனெனில் கர்த்தர் அவ்வளவு அன்புள்ளவர்.
ஒரு தேவ மனிதன் இவ்வாறாக எழுதுகிறார்:- என் ஜெயில் ஊழியத்தின் போது, மகா முரடனான கொடூரமான கைதி ஒருவனைச் சந்தித்தேன்.
பயங்கரமான ஒரு தோற்றம். தன் மனைவியைக்கூட, ஈவு இரக்கமின்றி குத்திக்கொலை செய்தவன். சட்டமும், சமுதாயமும் திருத்த முடியாத, அவனது கல்மனதை கல்வாரி அன்பு துளைத்தது.
தன் பாவங்களுக்காக, அவன் கண்ணீர் விட்டுக் கதறி அழுத காட்சியை என்னால் மறக்க முடியாது. 51 - ம் சங்கீதத்தை அவன் திறந்து வைத்துக்கொண்டு, ஒவ்வொரு வசனமாக வாசித்து பின், வேதத்தை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு, தேம்பித் தேம்பி அழுதான்.
"தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்" (சங்கீதம் 51:17) என்னும் வசனம் அவனை ஆழமாய் தொட்டது.
ஆம் நண்பர்களே, கல்லான உள்ளங்களை உடைக்கிறவர், கற்பாறையான இருதயங்களை மெழுகைப்போல உருக்கிறவர், நம் கல்வாரி நேசர் அல்லவா?
இன்றும் இரட்சிக்கப்படாத உங்கள் குடும்பத்தினரையும், அவர் இரட்சித்து தன் அன்புக்குள் நிச்சயமாய்க் கொண்டு வருவார். ஆமென்!! அல்லேலூயா!!!
"அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே , இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது. (#எபேசியர் 1:7)



