சிறையில் தம்மை தாக்கியவர்கள் தொடர்பில் சேபால அமரசிங்க விடுத்துள்ள வேண்டுகோள்

தன்னை தாக்கிய நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சேபால் அமரசிங்க சிறைச்சாலை திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர்களை எச்சரித்தாலே போதும் எனவும் அவர் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ரிமாண்ட் சிறைச்சாலையின் எல் வார்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் அண்மையில் சிலரால் தாக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
அதன்பிறகு இரு நிறுவனங்களும் தனித்தனியாக விசாரணையை தொடங்கின.
மனித உரிமைகள் ஆணைக்குழு சிறைச்சாலைக்கு வந்து விசாரணைகளை ஆரம்பிக்க தயாரான போது, விசாரணைகள் அவசியமில்லை என சேபால் அமரசிங்க தெரிவித்ததாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் தமது திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. விசாரணை நடத்த ஜெயிலர் நியமிக்கப்பட்டுள்ளார்.
5 சிறை அதிகாரிகள் மற்றும் பல கைதிகளின் வாக்குமூலங்களை அவர் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல கைதிகளின் வாக்குமூலங்களை பதிவு செய்த பின்னர், சம்பவம் தொடர்பான அறிக்கையை இன்று சிறைச்சாலை தலைமையகத்தில் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சேபால் அமரசிங்க இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.



