இன்றைய வேத வசனம் 30.01.2023: அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்
அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள். ஏசாயா 40:31
“இனி என்னால் இதைச் செய்ய முடியும் என்று எனக்கு தோன்றவில்லை,” என்று என் சிநேகிதி கண்ணீரோடு சொன்னாள்.
ஒரு சர்வதேச சுகாதார நெருக்கடியில் ஒரு செவிலியராக அவள் எதிர்கொண்ட இக்கட்டான சூழ்நிலையை அவள் விவாதிக்கும்போது அப்படி சொன்னாள். “தேவன் என்னை செவிலிய சேவை செய்ய அழைத்தார் என்பது எனக்குத் தெரியும். ஆனால் உணர்வுபூர்வமாய் சோர்ந்துபோயிருக்கிறேன்” என்றாள்.
அவள் மிகவும் சோர்வுற்றிருக்கிறாள் என்பதை அறிந்து, “நீ இப்போது உதவியற்றவளாய் உணருகிறாய் என்று எனக்குத் தெரியும், ஆனால் தேவன் உன்னை வழிநடத்தி பெலப்படுத்துவார்” என்று ஆறுதல் சொன்னேன்.
அந்த நேரத்தில் அவள் ஜெபிக்க தீர்மானித்தாள். விரைவில் அவளுடைய சோர்வுகள் மறைந்து ஒரு புதிய தெளிவுடன் காணப்பட்டாள்.
செவிலியர் பணியை தொடர்ந்து செய்வதற்கு மட்டுமல்லாது, பல நாடுகளில் இருக்கும் பல மருத்துவமனைகளுக்கு கடந்துசென்று சேவை செய்ய தேவன் அவளுக்கு பெலன் கொடுத்தார்.
கிறிஸ்துவின் விசுவாசிகளாய், நாம் பாரங்களினால் அழுத்தப்படும்போது நம்முடைய உதவிக்காகவும் ஊக்கத்திற்காகவும் தேவனை நோக்கிப் பார்ப்போம்.
ஏனெனில் அவர் “சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை” (ஏசாயா 40:28). ஏசாயா தீர்க்கதரிசி தேவனைக் குறித்து, “சோர்ந்துபோகிறவனுக்கு அவர்பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்” (வச. 29) என்று சொல்லுகிறார்.
தேவனுடைய பெலன் நித்தியமானது என்றாலும், நாம் சரீரப்பிரகாரமாகவும் உணர்வுரீதியாகவும் பாதிக்கப்படுவது தவிர்க்கமுடியாதது என்பதை அவர் அறிவார் (வச. 30). ஆனால் வாழ்க்கையின் சவால்களை மட்டும் கடக்க முயற்சிப்பதற்குப் பதிலாக, நம்முடைய பெலத்திற்காக நாம் தேவனை சாரும்போது, அவர் நம்மை மீட்டெடுத்து, புதுப்பித்து, விசுவாசத்தில் வளருவதற்கான நிச்சயத்தை நமக்குத் தருவார்.