இன்றைய வேதவசனம் 23.02.2023: சர்வலோக நியாயாதிபதி நீதிசெய்யாதிருப்பாரோ?
ஒரு பணக்கார தகப்பன் இருந்தார் அவருடைய மனைவி விபத்தில் இறந்துவிட்டார்கள். அவர்களுக்கு ஒரே ஒரு மகன் இருந்தான்.
அந்தப் பணக்கார தகப்பனும் அவருடைய மகனும் ஒரு பெரிய அரண்மனை போன்ற வீட்டில் செல்வ செழிப்புடன் வாழ்ந்து வந்தார்கள்.
அந்த மகனுக்கு மிகவும் ஆடம்பரமாக கல்யாணம் நடத்தி வைத்தார் அந்த பணக்கார தகப்பன்!
அந்த பணக்கார தகப்பனுக்கு மிகவும் வயதாகி விட்டது! அந்த அரண்மனை போன்ற வீட்டில் ஒரு சிறிய அறையில் தங்கியிருந்தார்!
ஒருமுறை அந்த வயதான தகப்பனாருக்கு மிகவும் சுகவீனமாகி விட்டது. உடனே ஒரு lawyer -ஐ அழைத்து தன் சொத்து முழுவதையும் தன் ஒரே மகனுக்கு எழுதி வைத்துவிட்டார்.
சில மாதங்கள் கழித்து, அந்த மகனும் மருமகளும் அந்த வயதான தகப்பனார் அறைக்கு வந்து நீங்கள் எங்களுடன் இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சிகரமாக இல்லை. எனவே நான் உங்களை ஒரு முதியவர் இல்லத்தில் சேர்த்து விடப்போவதாக அந்த மகன் கூறினான்!
அந்த வயதான தகப்பனாரால் இதை ஜீரணிக்க முடியவில்லை. இவ்வளவு பெரிய வீட்டில் நான் இந்த சிறிய அறையில் இருப்பது இவர்களுக்கு மகிழ்ச்சிகரமாக இல்லையா? இந்த மகனுக்கு நான் சிறுவயதில் என்ன குறை வைத்தேன்? என்று பல சிந்தனைகள் அவர் மனதில் ஓடியது. ஆனால் எதுவும் பேசவில்லை!
மகனிடம் சந்தோஷமாய் இருப்பது போல காட்டிக்கொண்டு, உன் சந்தோஷம் தான் என் சந்தோஷம் என்று கூறியபடியே ஒத்துக்கொண்டார்.
ஒரு குறிப்பிட்ட நாள் வந்தது, அந்த வயதான தகப்பன் தன் பெட்டி படுக்கை எல்லாம் எடுத்துக்கொண்டு தன் அறையில் இருந்து வெளியே வந்தார்.
மகன் தன் தகப்பனாரிடம் போகலாமா? அப்பா என்று கேட்டான். தகப்பனார் ஆம், நாம் காரில் செல்ல வேண்டாம் நடந்து செல்வோம் அருகில்தானே இருக்கிறது என்றார்.
இருவரும் நடந்து சென்றார்கள். போகும் வழியில் ஒரு காட்டுப் பகுதி இருந்தது. அந்தக் காட்டுப் பகுதி வழியாக செல்லும் போது அந்த தகப்பனார் கீழே உட்கார்ந்து அழத் தொடங்கினார்!
அந்த மகன் ஏனப்பா அழுகிறீர்கள்? ஆறு மாதத்திற்கு ஒருமுறை அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறை உங்களை வந்து நான் காண்கிறேன் அழாதீர்கள் என்று அந்த மகன் ஆறுதல்ப்படுத்தினான்!
20 நிமிடம் அழுது முடித்த பின்பு, தகப்பனார் கூறினாராம், நீ என்னை முதியோர் இல்லத்தில் சேர்ப்பது குறித்து நான் அழவில்லை. இதே காட்டுப்பகுதி வழியாக 40 ஆண்டுகளுக்கு முன்பு என் தகப்பனாரை நான் இதே முதியோர் இல்லத்தில் சேர்ப்பதற்காக அழைத்து சென்றேன்.
40 வருடம் கழித்து இன்று நீ என்னை முதியோர் இல்லத்தில் சேர்க்க இதே வழியாக அழைத்துச் செல்கிறாய் அதை நினைத்துதான் அழுகிறேன் என்றாராம்.
அன்பான தேவ ஜனமே, ஒன்றை மட்டும் இந்தக் கதையிலிருந்து விளங்கிக் கொள்ளுங்கள்! நான் யாரையும் பயமுறுத்தவோ, மிரட்டுவதற்க்கோ இந்தக் கதையை நான் எழுதவில்லை!
இந்தக் கதையில் இருந்து ஒன்றை மட்டும் ஆணித்தரமாக விசுவாசிக்கிறேன். நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதையே அறுப்பீர்கள்! தப்பவே முடியாது! (கலாத்தியர் 6:7)
இன்று நீங்கள் உங்கள் பெற்றோர்களை எவ்வாறு நடத்துகிறார்களோ, அதே போன்று நீங்கள் பெற்றோராக இருக்கும்போது உங்கள் பிள்ளைகளும் உங்களை நடத்தும் என்பதை மறந்து விடாதீர்கள்.
நீங்கள் நன்மையை விதைத்தால் நன்மை விளையும். நீங்கள் தீமையை விதைத்தால் தீமை விளையும். இதுவே தேவ நீதி!
இந்த வாலிப வயதில் நீங்கள் எதை விதைக்கிறார்கள் என்பதில் கவனமாக இருங்கள்! உங்கள் பெற்றோருக்கு கொடுக்க வேண்டிய கனத்தையும், மரியாதையையும் கொடுங்கள்!
உங்கள் பெற்றோர்களை காயப்படுத்தும்படியாக, ஏதாகிலும் ஒரு காரியம் செய்து இருந்தால் இன்றே மனம் பொருந்தி அவர்களிடம் போய் மன்னிப்பு கேட்டு ஒப்புரவாகுங்கள்!
அவர்களோடு நேரத்தை செலவிடுங்கள்! அவர்களில் அன்பு கூருங்கள்! தேவன் தாமே உங்களுக்கு உதவி செய்வாராக. ஆமென்!!
ஆதியாகமம் 18:25
சர்வலோக நியாயாதிபதி நீதிசெய்யாதிருப்பாரோ?