இன்றைய வேதவசனம் 02.03.2023: என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். மத்தேயு 11: 28
அமைதியற்ற ஆத்துமாவிற்குத் திருப்தி தருவது செல்வாக்கும் வெற்றியும் அல்ல. இந்த உண்மைக்கு, மரித்துப்போன அந்த புகழ்பெற்ற இசைக் கலைஞர் சாட்சி. அமெரிக்க இசை மற்றும் பொழுதுபோக்கிற்கான பிரபல பத்திரிக்கையின் தரவரிசையில், இவரது இசை தொகுப்புகள் நாற்பது முறைக்கும் மேல் முதலிடம் பிடித்ததுமில்லாமல், இவரது தனிப் பாடல்கள் பலமுறை முதலிடம் பிடித்தது. ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் செய்தும், சிறையிலும் சில நாட்கள் கழித்த இவர் தன் சாதனைகளின் மத்தியிலும் ஒரு நாள் இவ்வாறாக புலம்பினார்: “
நான் சாதனை செய்திருந்தாலும், திருமண வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தாலும், என் மனதில் என்னால் மேற்கொள்ள முடியாத ஒரு அமைதியின்மை நிலவுகிறது, நான் மரிக்கும் வரைக்கும் அது தொடரும்” என்றார்.
துரதிருஷ்டவசமாக இறப்பதற்கு முன் கூட, அந்த அமைதியை அவர் கண்டறியவில்லை.
இந்த இசை கலைஞனைப் போலப் பாவத்தினாலும், அதின் பாதிப்புகளாலும் வருத்தப்பட்டுச் சோர்ந்துபோன அனைவரையும் தன்னிடம் தனிப்பட்ட முறையில் வரும்படி இயேசு அழைக்கிறார். “என்னிடத்தில் வாருங்கள்” என்கிறார்.
நாம் இயேசுவில் உள்ள மீட்பை பெறுகையில், அவர் நமது பாரங்கள் அனைத்தையும் நீக்கி நமக்கு இளைப்பாறுதல் அளிக்கிறார் (மத்தேயு 11: 28). நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவரை விசுவாசிப்பதும், அவர் அளிக்கும் பரிபூரண வாழ்வை எவ்வாறு வாழ்வதென்று அவரிடம் கற்றுக்கொள்வதுமே (யோவான் 10:10). இயேசுவின் சீஷத்துவம் எனும் நுகத்தை நாம் ஏற்றுக்கொண்டால் அதின் முடிவு நமது ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் (மத்தேயு 11:29).
நாம் இயேசுவிடம் வருவதென்பது, நம் விருப்பத்தின்படி வாழும் சுதந்திரம் அல்ல. அமைதியற்ற நமது ஆத்துமாக்களுக்குச் சமாதானத்தை அருளி, நம்முடைய பாரங்களைக் குறைத்து, அவரில் வாழும் வழிக்குள்ளாய் நம்மை நடத்துகிறார். அவர் நமக்கு உண்மையான சமாதானத்தை தருகிறார்.