இன்றைய வேத வசனம் 07.03.2023: தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார்
தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார். ஆதியாகமம் 21:17
ஸ்வேதாவின் குடும்பம் பிரிவதை அவள் தன் கண்முன்னே பார்த்தாள். அவளுடைய கணவர் ஒருநாள் திடீரென வீட்டைவிட்டுச் சென்றுவிட்டார். அதனால் அவளும், அவளுடைய குழந்தைகளும், குழப்பத்துடனும் கோபத்துடனும் இருந்தனர்.
அவள் அவனைத் திருமண ஆலோசகரிடம் செல்லுமாறு கூற, அவன் தவறு முழுவதும் மனைவியிடம்தான் இருக்கிறதென்று சொல்லி, அதை மறுத்து விட்டான். அவன் திரும்பிவர வாய்ப்பில்லை என்பதை நினைக்கும்போது, அவள் பயத்தாலும் நம்பிக்கையின்மையினாலும் பாதிக்கப்பட்டாள். அவளால் தன்னையும், தன்னுடைய குழந்தைகளையும் தனியே கவனித்துக் கொள்ள முடியுமோ?
ஆபிரகாம் மற்றும் சாராளின் வேலைக்காரியாகிய ஆகாரும் இத்தகைய சூழலை எதிர்கொண்டாள். தேவன் தாம் வாக்குப்பண்ணினபடி (ஆதியாகமம் 12,15) ஒரு குமாரனைத் தருவாரென்பதற்குப் பொறுமையாய் காத்திராமல், சாராய் தன்னுடைய வேலைக்காரியாகிய ஆகாரை தன்னுடைய கணவருக்குக் கொடுத்தமையால், ஆகாருக்கு இஸ்மவேல் பிறந்தான் (ஆதியாகமம் 16:1-4,15).
ஆனால் தேவனுடைய வாக்கின்படி ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் ஈசாக்கு பிறந்தபோது, குடும்பத்திலுள்ள பதற்றம் அதிகரித்து, ஆபிரகாம் ஆகாரையும், இஸ்மவேலையும், சிறிது உணவு மற்றும் தண்ணீரைக் கொடுத்து அனுப்ப வேண்டியதாயிற்று (ஆதியாகமம் 21:8-21). அவளுடைய விரக்தியை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா? சீக்கிரத்தில் அவ்வுணவெல்லாம் தீர்ந்து வனாந்தரத்தில் தவித்தனர்.
ஆகார் செய்வதறியாமல் இஸ்மவேலை ஒரு புதரின் அடியில் வைத்துவிட்டு, தன் மகன் சாவதை காணவேண்டாமென்பதற்காக தூரமாக நடந்து சென்றாள். இருவரும் அழுதனர். ஆனால் தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார் (வ.17). தேவன் அவர்களுடைய அழுகையைக் கேட்டு, அவர்கள் தேவைகளைச் சந்தித்து, அவர்களோடே இருந்தார்.
தனிமையான நேரங்களில் விரக்தியுற்று நாம் தேவனிடம் அழுகிறோம். அப்படிப்பட்ட தருணங்களில் நம்முடைய வாழ்வில் அவர் கேட்கிறவராகவும், தேவைகளைச் சந்திப்பவராகவும், நம்முடன் கூட இருப்பவராகவும் இருக்கிறாரென்பது எவ்வளவு ஆறுதல் அளிக்கிறது.