இன்றைய வேத வசனம் 11.03.2023: உலகத்தில் உபத்திரவம் உண்டு ஆனாலும் திடன்கொள்ளுங்கள்
இந்த உலகத்தில் நாம் கிறிஸ்தவனாக மாறுவதற்கு முன்பாகவும், மாறினபின்பாகவும் நம்முடைய போராட்டங்களில் வித்தியாசங்கள் உண்டு என்பதை நாம் அறிந்து கொள்ளவேண்டும்.
இந்த உலக மனிதர்களைப் போலவே நாம் அநேகப் போராட்டங்களில் கடந்து போகவேண்டியவர்களாக இருக்கிறோம்.
ஆனால் உலக மனிதர்களைப்போல நாம் இந்த கிறிஸ்தவ வாழ்க்கையில் அல்லது கிறிஸ்வனான பின்பாக போராடுகிறவர்களாக இருக்கக்கூடாது, இருக்கமுடியாது.
இதற்கு முன்பாக ஆண்டவரை அறிந்திராதபடி வாழ்ந்த காலங்களில் நாம் நம்முடைய சொந்த ஞானத்தையும் அறிவையும் உபயோகப்படுத்தி வெற்றியுள்ளவர்களாக வாழ பிரயாசப்பட்டோம்.
ஆனால் அதில் அநேக தோல்விகள். ஆனால் கிறிஸ்தவனான பின்பாக நம்முடைய வாழ்க்கையில் போராட்டங்கள் குறைவுபடாது, அதிகமாகவே இருக்கும்.
உலக மனிதர்களைப் போல நாம் பல போராட்டங்களைக் கடந்து போகும்படியான காரியங்களும் உண்டு.
அதே சமயத்தில் நாம் நம்முடைய விசுவாசத்தைக் காத்துக்கொள்ளும்படியான போராட்டம் உண்டு.
இதை மிகபெரிய ஒரு ஆவிக்குரிய யுத்தம் என்றுக்கூட சொல்ல்லாம். ஆனால் அந்த பழைய வாழ்க்கையில் நாம் சந்தித்தப் போராட்டங்களில் நாம் தோல்வியைத் தழுவினோம் ஆனால் இந்த புதிய ஆவிக்குரிய வாழ்க்கையில் தோல்விகளைத் தழுவவேண்டிய அவசியமில்லை.
ஏனென்றால் தேவன் நம்மோடுகூட இருப்பதாக வாக்களித்தவர் மாத்திரமல்ல அவர் இருக்கிறவராகவே இருக்கிறார்.
நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். (#II_தீமோத்தேயு 4:6) என்று பவுல் சொல்வதைப் போல நாம் வெற்றியுள்ள கிறிஸ்தவர்களாக வாழமுடியும்.
உலகத்தில் உபத்திரவம் உண்டு ஆனாலும் திடன்கொள்ளுங்கள், உலகத்தை நான் ஜெயித்தேன். (#யோவான் 16:33) என்ற இயேசுவின் வார்த்தையைப் போல இந்த உலகத்தில் வெற்றியுள்ளவர்களாய் வாழமுடியும்.
போராட்டங்கள் அதிகம் ஆனால் வெற்றி நிச்சயம். சோர்ந்துப் போகாதபடிக்கு தொடர்ந்து நாம் கிறிஸ்துவுக்குள்ளாக நிலைத்து அவருடைய கிருபையின் பெலத்தோடு வெற்றிக்கொள்ளுவோம் என்ற உறுதியோடு கடந்துச் செல்லுவோம் அப்பொழுது தேவன் நமக்கு வெற்றியைக் கொடுப்பார். ஆமென்!! அல்லேலூயா!!!