இன்றைய வேத வசனம் 17.03.2023: நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்
இன்றைய சமுதாயம் தன்னிடம் உள்ள கைப்பேசியை நம்பி உலகத்தின் கடைமுனை மட்டும் பயமில்லாமல் பயணிக்கின்றனர்.
கூகுள் வரைபடம் இருந்தால் போதும் குக்கிராமத்திற்கு மட்டும் அல்ல குவைத் நாட்டுக்கு கூட கால்நடையாக போகலாம் என்பது பலரின் கருத்து.
ஆனால் எத்தனை பேர் இதுபோன்ற கண்டுபிடிப்புகளையும், மனிதன் உருவாக்கின உபகரணத்தையும் பின்பற்றி வழி தவறி எத்தனை பேர் தங்கள் வாழ்க்கையே தொலைத்திருக்கிறார்கள். மேலும் பலர் அடிமைதனத்தில் சிக்கியிருக்கிறார்கள்.
பலருக்கு அவர்களுடைய கைபேசி தான் உற்ற துணையாகவும், நல்யோசனை நல்கும் நண்பனாகவும் இருக்கின்றது.
ஆனால் இயேசு சொல்லிய உற்ற துணை, ஏற்ற நண்பன், நல்ல வழிகாட்டி, நம்மோடு ஒவ்வொரு நாளும் இருப்பவராகிய தேற்றரவாளனாகிய பரிசுத்த ஆவியானவரே.
ஆனால் இன்றைய சமுதாயம், இந்த தேற்றரவாளனோடு இணையாமல், தங்களை தேற்றுவதற்கு பல உபகரணங்களையும், உலகப் பொருட்களையும் பயன்படுத்தி, அவற்றை சார்ந்து வாழ்ந்து உண்மையான இயேசுவின் அன்பையும், உறுதியான உறுதுணையாகிய தேற்றரவாளனை மறக்கின்றனர். ஒருசிலர் வெறுக்கின்றனர்.
மேலும் சிலர் இன்றைய கலாச்சாரத்தைப் பார்த்து, நம்மோடு பேச, துணையாக இருக்க ரோபோக்கள் உண்டு என்ற மெய்நிகர் உலகில் வாழ்ந்து, தங்கள் வாழ்க்கையை வீணாக்கிக் கொண்டிருக்கின்றனர்.
இன்றைக்கு மனிதர்களின் பிரச்சனையே, பாவமும் மற்றும் பரிசுத்தமாக வாழ்வதுமே.
இந்த தேற்றரவாளன் நம் வாழ்க்கையில் இருப்பாரானால் பாவத்தைக் குறித்தும் நீதியைக் குறித்தும் வரப்போகிற நியாயத்தீர்ப்பைக் குறித்தும் கண்டித்து உணர்த்துவார்.
நம்முடைய உற்ற துணை, நண்பன், நெருங்கிய நண்பன் என்று பலரை சொல்லுவோம். ஆனால் நாம் தவறு செய்யும்போது நம் மனதை புண்படுத்தக் கூடாது என்பதற்காக ஒருநாளும் அவர்கள் நமக்கு சொல்வதில்லை.
ஆனால் பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளன் நம்மேல் மிகுந்த அக்கறையும், அன்பும் உள்ளவர் என்பதால் நம்மை எச்சரிப்பதும் மட்டுமின்றி, நாம் வழுவாமல் சீரான பாதையில் நாள்தோறும் செல்ல அடித்தளம் அமைக்கின்றார்.
எனக்கன்பான வாசகர்களே! இந்த கடைசி காலத்தில் உங்கள் ஐக்கியமும், ஆர்வமும், அசைக்க முடியாத உறுதியும், ஆழமான அன்பும் , பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளன் மீது உண்டானால், அவர் பயன்படுத்தும் வல்லமையான பாத்திரமாக நீங்கள் மாற முடியும்.
அவர் உங்களை முத்திரை மோதிரமாக பயன்படுத்துவார் . உங்களைப்போல் உள்ள ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் உற்ற துணையாக, தேற்றரவாளனாகிய பரிசுத்த ஆவியானவர் இருப்பாரானால், எளிதில் இயேசுவின் அன்பை அவனி எங்கும் ஏக்கத்தோடு எடுத்துரைக்க முடியும்!
நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.
அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். (#யோவான் 16:7,8) ஆமென்!! அல்லேலூயா!!!