கால்பந்து உலகின் ஜாம்பவான் மெஸ்ஸியின் கடவுச்சீட்டு செல்லாது: தடுத்து நிறுத்திய சீன பொலிஸ்
ஆர்ஜென்டினா கால்பந்து அணியின் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி கடந்த சீசனில் பிரான்ஸ் நாட்டின் லீக் 1 தொடரில் பி.எஸ்.ஜி கிளப்பிற்கு விளையாடி, வெளியேறும் முடிவிற்கு வந்துவிட்டார்.
அடுத்ததாக பார்சிலோனா அணியா? கிறிஸ்டியானோ ரொனால்டோ போல சவுதி அரேபியா பக்கம் தலைகாட்டுவாரா? குறிப்பாக அல் ஹிலால் கிளப் கொடுத்த மெகா டீலிங்கிற்கு சம்மதம் தெரிவிப்பாரா? போன்ற மில்லியன் டொ லர் கேள்விகள் எழுந்தன.
இன்டர் மியாமி கிளப்பிற்கு ஒப்பந்தம்
யாரும் எதிர்பாராத வகையில் அமெரிக்காவின் மேஜர் லீக் சாக்கர் தொடரில் இன்டர் மியாமி கி ளப்பிற்கு விளையாட மெஸ்ஸி விருப்பம் தெரிவித்துள்ளார். அந்த அணியின் உரிமையாளர் டேவிட் பெக்காம். இவர் மெஸ்ஸியின் முன்னாள் சக வீரர் மற்றும் நெருங்கிய நண்பர். டேவிட் பெக்காம் மூலமே இன்டர் மியாமி ஆஃபர் சாத்தியமானதாக கால்பந்து வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சீனாவில் பிரெண்ட்ஷிப் ஆட்டம்
இதேவேளை எதிர்வரும் ஜூலை 5ஆம் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும், அதன்பிறகு இன்டர் மியாமி கிளப்பின் வீரராக மெஸ்ஸி மாறிவிடுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் சின்னதாக ஒரு சர்வதேச சுற்றுலாவுக்கு மெஸ்ஸி தயாராகி விட்டார். அதாவது, சீனாவின் பெய்ஜிங் நகரில் உள்ள ஒர்க்கர்ஸ் மைதானத்தில் எதிர்வரும் 15ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு ஆர்ஜென்டினா, ஆஸ்திரேலியா இடையில் நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி நடைபெறவுள்ளது.
இதில் கலந்துகொள்ள மெஸ்ஸி பிரைவேட் ஜெட் விமானம் மூலம் சீனா புறப்பட்டு சென்றார். மெஸ்ஸி உடன் சக அணி வீரர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் சென்றிருந்தனர். இந்நிலையில் சீனத் தலைநகர் பெய்ஜிங் விமான நிலையத்தில் வந்திறங்கியதும் மெஸ்ஸிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஜெட்டில் இருந்து இறங்கி விமான நிலையத்திற்குள் சென்றதும் தனது ஸ்பானிஷ் பாஸ்போர்ட்டை காண்பித்துள்ளார் ஆனால் அது செல்லாது என்று அதிகாரிகள் தெரிவிக்கவே, மெஸ்ஸி ஆடிப் போய் விட்டார். ''தைவானில் என்னுடைய பாஸ்போர்ட் செல்லுபடியாகிறது. சீனாவில் செல்லாதா?” எனக் கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சீன பொலிசார் அவரை தடுத்து நிறுத்தி தனியே அமர வைத்துள்ளனர். பின்னர் அதிகாரிகள் மட்டத்தில் தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
பாஸ்போர்ட் செல்லாது
மெஸ்ஸி பயன்படுத்திய ஸ்பானிஷ் பாஸ்போர்ட் மூலம் தைவானிற்கு செல்லலாம். ஆனால் சீனாவிற்குள் நுழைய வேறு பாஸ்போர்ட் அல்லது விசா அனுமதி பெற வேண்டும் எனத் தெரிய வருகிறது. மெஸ்ஸியை அனுமதிக்க அரசு அனுமதித்த நிலையில், பிரத்தியேக விசாவை தயாரித்து வழங்க முடிவு செய்யப்பட்டது. சுமார் இரண்டு மணி நேரம் தாமதமான நிலையில் புதிய விசாவுடன் சீனாவிற்குள் செல்ல மெஸ்ஸி அனுமதிக்கப்பட்டார்.