2024 இல் பிரதமர் யார்; கருத்துக்கணிப்பு!

PriyaRam
1 year ago
2024 இல் பிரதமர் யார்; கருத்துக்கணிப்பு!

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. முன்னரை விட பிராந்திய கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் தேர்தலாக இது இருக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

கடந்த 2014, 2019 என தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியைப் பிடித்த பாஜக மீண்டும் ஆட்சியில் அமர காய் நகர்த்தி வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியிலும் இறங்கியுள்ளது.

தொடர்ந்து இரண்டு முறை தோல்வியைச் சந்தித்த காங்கிரஸ் இந்த முறை விட்டுவிடக்கூடாது என களப் பணியாற்றுகிறது. ராகுல் காந்தியின் ‘இந்திய ஒற்றுமைப் பயணம்’ மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. விரைவில் அதன் அடுத்த கட்ட பயணத்தை ராகுல் காந்தி தொடங்க உள்ளார். அண்மையில் நடைபெற்ற கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது அக்கட்சிக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

மூன்றாம் அணி அமைந்து வாக்குகள் சிதறி விடக்கூடாது என்பதால் எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் தேசிய அளவில் நடைபெறுகின்றன. இந்த சூழலில் தந்தி டிவி மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது. இந்தியாவின் மதச்சார்பற்ற சமூக நிலைத்தன்மைக்கு யார் பிரதமராக வேண்டும் என்ற கேள்வியை அடிப்படையாக வைத்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் 2500 பேரிடம் இந்த கருத்துக் கணிப்பு நடாத்தியுள்ளது.

இந்த கருத்துக் கணிப்பு முடிவில் பாஜகவின் நரேந்திர மோடிக்கு 27 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. காங்கிரஸின் ராகுல் காந்திக்கு 72 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. மற்றவைக்கு 1 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.

இந்த கருத்துக் கணிப்பு முடிவின் படி மதச்சார்பின்மை என்று வந்தால் ராகுல் காந்திக்கே பெரும்பான்மை கிடைக்கிறது. அதே சமயம் இந்துத்துவ ஆதரவு தமிழ்நாட்டிலும் லேசாக அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.