அமைச்சர் செந்தில் பாலாஜி; பிணை மனு மீதான உத்தரவு நாளை ஒத்திவைப்பு!

PriyaRam
1 year ago
அமைச்சர் செந்தில் பாலாஜி; பிணை மனு மீதான உத்தரவு நாளை ஒத்திவைப்பு!

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட மின்சார வாரியத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனு மீதான உத்தரவை நாளை ஒத்திவைப்பதாக சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அறிவித்தார். 

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த போது போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதில் முறைகேடு செய்ததாக செந்தில் பாலாஜியின் அலுவலகம் மற்றும் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது. இந்த சோதனை அடிப்படையில் இன்று அதிகாலையில் அவர் கைது செய்யப்பட்டார். 

இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அமைச்சர் அனுமதிக்கப்பட்டார். செந்தில் பாலாஜிக்கு 3 அடைப்புகள் இருப்பதாகவும், இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவமனை இயக்குனர் பரிந்துரை செய்தார். 

இந்நிலையில், செந்தில் பாலாஜியை எதிர்வரும் 28 ஆம் திகதிவரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதையடுத்து, இந்த வழக்கில் பிணை கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். 

அமைச்சர் சார்பில் வாதாடிய திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், வழக்கறிஞருமான என்.ஆர் இளங்கோ, இந்த கைது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட நடவடிக்கை என்றும், மாநில அரசுக்கு களங்கம் ஏற்படுத்தவே மேற்கொள்ளப்படுவ தாகவும் தெரிவித்தார்.

மேலும், அமலாக்கத்துறை விதி மீறல்கள் குறித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி- வழக்கறிஞர், மனித உரிமை மீறல் நடைபெற்றுள்ளதாகவும், நள்ளிரவில் கைது செய்தது சட்டவிரோதமானது என்றும் அவர் வாதிட்டார்.