தக்காளி ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து; காவலுக்கு நின்ற போலீசார்
கர்நாடக மாநிலம் கோலாரில் இருந்து மஹாராஷ்டிரா மாநிலம் சந்திராபூருக்கு நள்ளிரவு ரூ15 லட்சம் மதிப்புள்ள தக்காளிகளை ஏற்றிக்கொண்டு லாரி புறப்பட்டது. இந்த லாரி தெலங்கானா மாநிலம் கொமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் வாங்கிடமண்டலம் சமேலா பஸ் நிலையம் அருகே அதிகாலை சென்றபோது எதிரே சென்ற காரை முந்த முயன்றபோது, திடீரென லாரி கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இடிபாட்டில் சிக்கி டிரைவர் காயம் அடைந்தார்.
இதையறிந்த சுற்றுவட்டார கிராம மக்கள் அங்கு வந்து தக்காளியை எடுத்து செல்ல முயன்றனர். அதற்குள் அவசர போலீஸ் எண் 100க்கு போன் செய்து தெரிவிக்கப்பட்டதால் உடனே துப்பாக்கி ஏந்திய போலீசார் அங்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். இதற்கிடையில் அங்கு வந்த பொதுமக்கள் உதவியுடன், சாலையில் கொட்டிய தக்காளிகளை டிரேவில் ஏற்றி மற்றொரு லாரியில் ஏற்றி அனுப்பி வைத்தனர். பின்னர் லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
தக்காளி கிலோ தற்போது ரூ100 முதல் ரூ250 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பல இடங்களில் தக்காளி விற்பனைக்கு கொண்டு செல்லும் வாகனத்தை வழிமடக்கி நிறுத்தி கடத்தி செல்வதும், தக்காளி வைத்திருக்கும் கடைகளில் திருட்டு சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சாலையில் தக்காளி லோடு ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது அறிந்த பொதுமக்கள் அதனை அள்ளிச்செல்ல திரண்ட நிலையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவுகிறது.