ஜே.ஆர் ஜயவர்தனவின் கொள்கையை பின்பற்றாமையே இலங்கைக்கு இந்த நிலை! ஜனாதிபதி

#SriLanka #Sri Lanka President #Ranil wickremesinghe #economy #Tamilnews #sri lanka tamil news
Mayoorikka
11 months ago
ஜே.ஆர் ஜயவர்தனவின் கொள்கையை பின்பற்றாமையே இலங்கைக்கு இந்த நிலை! ஜனாதிபதி

மறைந்த ஜே.ஆர் ஜயவர்தன, 1977ஆம் ஆண்டுகளில் ஆரம்பித்த சமூக பொருளாதார கொள்கைகளை அவ்வண்ணமே முன்னோக்கி கொண்டு சென்றிருந்தால் இலங்கை இன்று அபிவிருத்தி அடைந்த நாடாகியிருக்கும் என ஜனாதிபதி ரணி்ல் விக்ரமசிங்க தெரிவித்தார்.

 ஜே.ஆர் ஜயவர்தனவின் 117ஆவது ஜனன தின நிகழ்வையொட்டி ஜனாதிபதி விடுத்துள்ள விசேட செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

 ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் 78ஆவது அமர்வில் பங்கேற்க அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையிலேயே, ஜே.ஆர் ஜயவர்தனவின் ஜனன தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி விசேட செய்தியை வெளியிட்டுள்ளார். 

 ஜனாதிபதியின் உரையை ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர், பீ. மும்முல்லகே நிகழ்வில் வாசித்தார். அவரது செய்தியில், ஜே.ஆர் ஜயவர்தன இந்நாட்டில் சமூக பொருளாதாரத்தில் புரட்சியை ஏற்படுத்திய புரட்சியாளர்.

 அவர் 1977 ஆம் ஆண்டுகளில் ஆரம்பித்த சமூக பொருளாதார கொள்கைகளை அவ்வண்ணமே முன்னோக்கிக் கொண்டு சென்றிருந்தால் இலங்கை இன்று அபிவிருத்தி அடைந்த நாடாகியிருக்கும். 

 நாட்டில், ஏற்பட்ட கலவரங்கள், யுத்தம் மற்றும் அவரது கொள்கை பற்றிய புரிதல் இன்மை காரணமாக, அவரது சமூக பொருளாதார கொள்கைகளின் பலன்களை முழுமையாக அடைய முடியாமல் போனது. 

 எமது வலயத்தின் இந்தியா , சீனா, வியட்நாம், உள்ளிட்ட நாடுகள் ஜே. ஆர் ஜயவர்தனவின் கொள்கைகளையே பின்பற்றின. அந்த நாடுகள் காலத்திற்கு ஏற்றவாறு தமது கொள்கைகளை மாற்றிக்கொண்டு முன்னோக்கிச் சென்றன. 1938 களில் காங்கிரஸ் கட்சி உறுப்பினராக அரசியலுக்கு பிரவேசித்த அவர், 1946 களில் ஐக்கிய தேசிய கட்சியை ஆரம்பித்தார்.

 இலங்கையின் முதலாவது கெபினட் அமைச்சராக தெரிவானதோடு, டட்லி சேனநாயக்கவுக்கு பின்னர் 1973 களில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

 1977 தேர்தலில் இலங்கையின் பிரதமரான ஜே. ஆர். ஜயவர்தன அரசியலமைப்பு மாற்றத்தின் ஊடாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை உருவாக்கினார். அணிசேரா அமைப்பின் ஆறாவது பொதுச் செயலாளராக அவர் தனது நாட்டுக்காக ஆற்றிய சேவைகள் மகத்தானவை. ,அதனை நினைவுகூருவது பாராட்டப்பட வேண்டியது என்றார்.

 இந்நிகழ்வில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அமைச்சர் பந்துல குணவர்தன, சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கை மற்றும் ஆய்வுக் குழுவின் தலைவர் கருணாசேன கொடித்துவக்கு, ஜே.ஆர்.ஜயவர்தனவின் பேரன்களான ஏ.ருக்சான் ஜயவர்தன, அம்ரிக் ஜயவர்தன, ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர்.ஏ.பி. தயாரத்ன, ஜே.ஆர். ஜயவர்தன நிலைய நிர்வாக சபை உறுப்பினர் சிரேஷ்ட பேராசிரியர் யு. ஜி. புஸ்வேவல மற்றும் ஜே. ஆர். ஜயவர்தன நிலைய உறுப்பினர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.