காசா போர் நிறுத்தம் தொடர்பில் ஐ.நா கவுன்சில் எடுத்துள்ள தீர்மானம்!
காசா பகுதியில் போர்நிறுத்தத்தை உடனடியாக அமுல்படுத்த ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்குமாறு ஹமாஸ் அமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு அக்டோபரில் காசா பகுதியில் நடவடிக்கைகள் தொடங்கிய பின்னர், பாதுகாப்பு கவுன்சிலில் பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டன, ஆனால் அவை அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் வீட்டோ அதிகாரத்தால் நிறைவேற்றப்படவில்லை.
எவ்வாறாயினும், நேற்று (25.03) முன்வைக்கப்பட்ட பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இருந்து அமெரிக்கா விலகியிருந்ததுடன், அதற்கு எதிராக வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தாமல் இருந்தமையும் விசேட அம்சமாகும்.
அமெரிக்காவின் நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் கவலை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல்-அமெரிக்க பிரதிநிதிகள் குழுவினால் இந்த வாரம் வாஷிங்டனில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த கலந்துரையாடலை ரத்து செய்யவும் இஸ்ரேல் நடவடிக்கை எடுத்துள்ளது. இது இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள பிரிவினையின் சமிக்ஞை என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
எவ்வாறாயினும், இந்த முன்மொழிவை ஏற்றுக்கொண்ட ஐக்கிய நாடுகள் சபைக்கான பலஸ்தீனிய பிரதிநிதி ரியாட் மன்சூர், 100,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்ட பின்னர் சுமார் இரண்டு மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்த பின்னர் முன்வைக்கப்பட்ட திட்டம் மிகவும் தாமதமானது என்று கூறினார்.