மொஸ்கோ தாக்குதல் - மேலும் ஒரு சந்தேகநபர் கைது

#Arrest #Attack #Russia #Court #Moscow
Prasu
4 weeks ago
மொஸ்கோ தாக்குதல் - மேலும் ஒரு சந்தேகநபர் கைது

ரஷ்யாவின் மொஸ்கோவிற்கு அருகில் உள்ள குரோகஸ் சிட்டி ஹால் தியேட்டர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8வது சந்தேக நபரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

பிரதான சந்தேகநபர்கள் 04 பேருக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு தசாப்தங்களில் ரஷ்யா மீது நடத்தப்பட்ட மிக மோசமான பயங்கரவாத தாக்குதலாக கருதப்படும் இந்த தாக்குதலில் 139 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 182 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஐந்தாவது முறையாக ரஷ்யாவில் அதிகாரத்தை பலப்படுத்திய நிலையில் நடந்த இந்த பயங்கரவாத தாக்குதல், அவர் எதிர்கொண்ட பலமான சவால்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

இந்த தாக்குதலை ஐ.எஸ்.ஐ.எஸ் கூட்டணி நடத்தியது என்பதற்கு ஆதாரம் இருப்பதாக அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் கூறியிருந்தன. இது இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதல் என்று அதிபர் புதின் ஒப்புக்கொண்டாலும், அவர்களை யார் வழிநடத்தியது என்பது பிரச்சனைக்குரியது என்று கூறினார்.

இந்த தாக்குதலில் நேரடியாக தொடர்புடைய 4 சந்தேக நபர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது கடும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆனால் நேற்று நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட 8வது சந்தேக நபருக்கு எந்தவிதமான உடல் உபாதைகளும் ஏற்படவில்லை. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ரஷ்ய மனித உரிமைகள் ஆணையாளர், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடையதாகக் கருதப்படும் சந்தேக நபர் மத்திய ஆசிய கிர்கிஸ் குடியரசில் பிறந்தவர்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட தஜிகிஸ்தான் சந்தேக நபர்களின் குடும்பத்தினரிடம் இருந்து தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக ரஷ்ய புலனாய்வாளர்கள் குழுவொன்று தஜிகிஸ்தானுக்கு சென்றுள்ளது.

 தாக்குதலுடன் நேரடியாக தொடர்புடைய நான்கு தாஜிக் சந்தேக நபர்களின் குடும்ப உறுப்பினர்கள் ரஷ்ய புலனாய்வாளர்கள் முன் ஆஜர்படுத்துவதற்காக அவர்களின் கிராமப்புறங்களில் இருந்து தலைநகர் துஷான்பேக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்