தென்கொரியா சாலையில் ஓடி திரிந்த நெருப்புக்கோழி
வன விலங்குகள், பறவைகளை பூங்காக்களில் கூண்டுக்குள் பார்க்கும் பார்வையாளர்கள் பரவசப்படுவார்கள். அதே நேரம் அவை ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் போது ஆபத்தாக மாறிவிடும்.
அந்த வகையில் நெருப்புக்கோழி ஒன்று சாலைகளில் ஓடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தென்கொரியாவின் சியோங்னாம் நகரில் நடைபெற்றுள்ளது.
சம்பவத்தன்று காலை அந்த பகுதியில் சாலைகளில் அங்கும், இங்குமாக ஓடிய ராட்சத நெருப்புக்கோழி திடீரென சுரங்க பாதை பகுதிக்குள் புகுந்தது. தடோரி பகுதியில் சுற்றுச்சூழல் பூங்காவில் இருந்து தப்பிய இந்த நெருப்புக்கோழி சாலைகளில் ஓடியதோடு, சில வாகனங்கள் மீது மோதி உள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து வாகனங்களை நிறுத்தினர். சிலர் தங்களது செல்போன்களில் அதனை வீடியோ எடுத்தனர். இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே சாலையில் நெருப்புக்கோழி ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டனர்