600 பணியாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆப்பிள் நிறுவனம்
ஆப்பிள் நிறுவனம் தனது புதிய கார் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் திட்டங்களை ரத்து செய்ததை அடுத்து, பணியாளர்களில் 600 பேரை அதிரடியாக நீக்கம் செய்து அதிர்ச்சி தந்துள்ளது.
உலகின் தலைசிறந்த டெக் நிறுவனங்களில் ஒன்று ஆப்பிள். இது மொபைல் போன், வாட்ச் உள்ளிட்டவற்றில் ஸ்மார்ட் என்ற முன்னொட்டு சேர்வதற்கு அர்த்தம் ஊட்டிய நிறுவனமாகும்.
இன்றுவரை அதன் ஐபோன், ஐமேக் தயாரிப்புகள் முன்னணி விற்பனையில் உள்ளன. பொறியியல் படிப்பை முடித்தவர்களில் கனவுகளில் ஒன்றாக ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றுவதும் இருக்கும்.
அதற்கு ஏற்ப பணியாளர்களை கவுரவிப்பதிலும் ஆப்பிள் நிறுவனம் தனித்துவத்தை நிரூபித்து வந்திருக்கிறது.
இத்தகைய பின்புலமிக்க ஆப்பிள் நிறுவனம் அதிரடியாக 600 ஊழியர்களை பணி நீக்கம் செய்திருப்பது டெக் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவை தளமாக கொண்ட ஆப்பிள் நிறுவனம், அதன் புதிய கார் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் டிஸ்ப்ளே திட்டங்களை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முடிவுகளின் ஒரு பகுதியாக இந்த பணி நீக்கத்தை கையிலெடுத்துள்ளது.
கலிபோர்னியா மாகாண வேலைவாய்ப்பு மேம்பாட்டுத் துறையிடம் ஆப்பிள் நிறுவனம் தாக்கல் செய்த தரவுகளில் இருந்து இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.