ஹமாஸ் தலைவரின் மூன்று மகன்கள் தாக்குதலில் பலி
இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, இஸ்ரேல் ஹமாஸ் மீது போர் பிரகடனம் செய்து காசா முனை மீது தாக்குதல் நடத்த தொடங்கியது.
கடந்த அக்டோபர் மாதம் 2-வது வாரத்தில் தொடங்கிய இந்த தாக்குதல் இன்றும் நீடித்துக் கொண்டு வருகிறது.
இந்த தாக்குதலில் காசாவில் உள்ள 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியேவின் மூன்று மகன்கள் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தகவலை ஹமாஸ் அமைப்பின் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
மேலும், உறவினர்கள் சமூக வலைத்தளங்களில் உறுதிப்படுத்தியுள்ளனர். மூன்று மகன்களுடன் மூன்று பேரன்களும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பழி வாங்கும் எண்ணத்தில் கொலை செய்ததாக இஸ்ரேல் மீது இஸ்மாயில் ஹனியே குற்றம் சாட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷாதி முகாமில் இருந்தபோது இஸ்ரேல் ராணுவம் தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இஸ்மாயில் ஹனியே தற்போது கத்தாரில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.