50 பெண்கள் மீது வழக்கு தொடர்ந்த நபர்
டேட்டிங் கலாச்சாரம் உலகம் முழுவதும் சர்வ சாதாரணமாக மாறி வருகிறது. டேட்டிங் செய்வதற்கு இணையை தேர்வு செய்ய ஆன்லைனில் ஏராளமான செயலிகளும் வந்துவிட்டன.
இந்நிலையில் கலிபோர்னியாவை சேர்ந்த ஸ்டீவர்ட் லூகாஸ் முர்ரே என்பவர் தன்னுடன் டேட்டிங் சென்ற பெண்கள் அவர்களின் அனுபவத்தை பகிர்ந்ததாக கூறி, தன்னை பற்றி விமர்சனம் செய்ததாக 50 பெண்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
'ஆர் வீ டேட்டிங் தி சேம் கை' என்ற பேஸ்புக் குழுவில் பெண்கள் டேட்டிங் செய்யும் போது சந்தித்த அனுபவங்களையும், சில ஆலோசனைகளையும் பகிர்ந்துள்ளனர். அதில், பெண்கள் ஸ்டீவர்டுடன் டேட்டிங் சென்றது பற்றி பகிர்ந்துள்ளனர்.
அதில் அவர்கள் ஸ்டீவர்ட்டை மோசமான இணை என கூறி உள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த பெண்கள் தன்னை பற்றி அவதூறு செய்வதாக கூறி 50 பெண்கள் மீது ஸ்டீவர்ட் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், அந்த பெண்கள் தன்னை பற்றி கூறிய அவதூறுக்கு நஷ்ட ஈடாக 2.6 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.21 கோடி) கேட்டுள்ளார்.
இதுபற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களில் பேசுபொருளான நிலையில், சம்பந்தப்பட்ட பெண்கள் அளித்த பதிலில், ஸ்டீவர்ட் சட்ட நடவடிக்கையை பயன்படுத்தி தங்களை மிரட்டுவதாக கூறி உள்ளனர்.