ஈரான் நடத்தியுள்ள தாக்குதல் நிலை மிகவும் அபாயகரமானது! இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர்
தற்போது ஈரான் நடத்தியுள்ள தாக்குதல் நிலை மிகவும் அபாயகரமானது மற்றும் தீவிரமானது என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், ஈரான் மண்ணில் இருந்து இஸ்ரேலின் மீது ஈரான் நேரடித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஈரான் இஸ்ரேலை நோக்கி அனுப்பும் கொலையாளி ட்ரோன்களை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்.
இது மிகவும் தீவிரமானது மற்றும் அபாயகரமானது இஸ்ரேல் விமானப்படை விமானங்கள் வானில் எந்தவிதமான அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார். இதேவேளை, ஈரான் ஆளில்லா விமானத்தை விடுவித்ததைத் தொடர்ந்து, நாட்டின் பாதுகாப்பு அமைப்புகள் செயல்பாட்டில் வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். மேலும், தற்காப்பு அல்லது தாக்குதல் என்ற எந்த சூழ்நிலைக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இஸ்ரேல் தேசம் பலமானது. இஸ்ரேல் பாதுகாப்புப் படை வலுவாக உள்ளது. மக்கள் வலிமையானவர்கள். மேலும், அமெரிக்காவுடன், பிரிட்டன், பிரான்ஸ் மற்றூம் பல நாடுகளும் எங்களுக்கு ஆதரவளித்து வருவதைப் பாராட்டுவதாக நெதன்யாகு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக தற்போதைய தாக்குதலை ஈரான் மேற்கொண்டுள்ளது. கடந்த நாட்களில், தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்து வந்த ஈரான் நேற்றைய தினம் இரவில், ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியுள்ளது. நூற்றுக்கணக்கான ஆளில்லா விமானங்கள் மூலம் ஈரான் தங்களது தாக்குதலை தீவிரப்படுத்தியதாகவும்,இதனை முறியடிக்கும் முயற்சியில் இஸ்ரேல் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேல் எல்லையில் அத்துமீறும் ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.