சமீபத்திய உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில் 11 பேர் பலி
உக்ரைனின் தலைநகர் கீவ் நகரில் இருந்து சுமார் 150 கி.மீட்டர் தொலைவில் உள்ள செர்னிஹிவ் நகர் மீது ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். 22 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இன்று ரஷியா 8 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டடம் மீது நடத்திய தாக்குதலில் இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதாக உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
செர்னிஹிவ் ரஷியா மற்றும் பெலாரஸ் எல்லையில் உள்ளது. இங்கு சுமார் 2.5 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள். உக்ரைன் மீது ரஷியாவின் தாக்குதல் 3-வது ஆண்டாக நீடித்து வருகிறது.
தற்போது அமெரிக்காவின் உதவி கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதால் உக்ரைனால் ரஷியாவின் வான்வழி தாக்குதலை எதிர்கொள்வதற்கு தடுமாறி வருகிறது. இதனால் உக்ரைன் இழப்புகளை சந்தித்து வருகிறது. கடந்த வாரம் முக்கியமான மின்சார உற்பத்தி நிலையம் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
11 ஏவுகணைகளில் ஏழு ஏவுகணைகளை தாக்கி அழித்ததாக உக்ரைன் தெரிவித்தது. மேலும், தாக்குதல் நடத்த ஏவுகணை இல்லாததால் தாக்குதலை எதிர்கொள்ள நேரிட்டது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.
குளிர்காலத்தில் ரஷியா உக்ரைனை நோக்கி முன்னேறாமல் இருந்தது. ஆனால் ஆயுத உதவி கிடைக்காமல் உக்ரைன் திணறி வரும் நிலையில், இதை சாதமாக பயன்படுத்திக் கொண்டு படிப்படியாக முன்னேறி வருவதாக ராணுவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 60 பில்லியன் அமெரிக்க டாலர் அளிவிலான ஆயுத உதவிகளுக்கு அமெரிக்காவின் நாடாளுமன்றம் இன்னும் ஒப்புதல் வழங்காமல் உள்ளது.
இதனால் உக்ரைனுக்கு ஆயுத உதவி கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. வான்பாதுகாப்பு ஆயுதங்களை வழங்கும்படி மேற்கத்திய நாடுகளிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உதவி கேட்டு வருகிறார்.
உக்ரைன் போதுமான பாதுகாப்பு ஆயுதங்களை பெற்றிருந்தால் செர்னிஹிவ் தாக்குதல் நடைபெற்றிருக்கிறாது எனவும் தனது கவலையை தெரிவித்துள்ளார்.