வெள்ளத்தில் தத்தளிக்கும் டுபாய்!
ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது..
இதனால், வீதிகளில் நீர் தேங்கியது. பல இடங்களில் வாகன போக்குவரத்தும் முடங்கியது. கனமழை மற்றும் வெள்ளம் எதிரொலியாக, விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
டுபாயில் சர்வதேச பயணிகள் அதிகம் வரக்கூடிய, உலகில் பரபரப்புடன் இயங்க கூடிய டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளநீர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன. நேற்று மாலை 100 விமானங்கள் வரை வந்து சேரக்கூடிய நிலையில், பல விமானங்களின் வருகை பாதிக்கப்பட்டது.
எண்ணற்ற விமானங்கள் காலதாமதத்துடனும், ரத்து செய்யப்பட்டும் இருந்தன. இது விமான பயணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. விமான ஓடுபாதையில் வெள்ளம் புகுந்ததில், விமானங்கள் மற்றும் கார்கள், நீரில் பாதியளவு மூழ்கின. விமானங்கள் நிறுத்தும் பகுதியில் வெள்ளநீர் புகுந்தது.
விமான நிலையத்திற்கு வந்து சேரும் வீதிகளும் நீரில் மூழ்கி இருந்தன. இதேபோன்று, டுபாயில் உள்ள டுபாய் மால், அமீரக மால் உள்ளிட்ட வணிக வளாகங்கள் மற்றும் பிற முக்கிய கட்டிடங்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டது. டுபாயின் மெட்ரோ ரெயில் நிலையம் ஒன்றில் வெள்ள நீர் புகுந்திருந்தது. வீதிகள் , குடியிருப்பு பகுதிகள் நீரில் மூழ்கின.
பல்வேறு வீடுகளின் மேற்கூரைகள், கதவுகள் மற்றும் ஜன்னல்கள் வழியே நீர் உள்ளே புகுந்தது. ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால், அமீரகத்தில் உள்ள பாடசாலைகள் முழுவதும் மூடப்பட்டன. இன்றும் புயல் வீசக்கூடும் என முன்னறிவிப்பு வெளிவந்துள்ளது.
இதனால், அரச ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டனர். டுபாய் மட்டுமின்றி பஹ்ரைன் மற்றும் ஓமனிலும் புயலால் வெள்ளம் ஏற்பட்டது. ஓமன் நாட்டில் கனமழை மற்றும் பெருவெள்ளத்திற்கு 18 பேர் பலியாகி உள்ளனர்.
தொடர்ந்து சில நாட்களுக்கு ஓமனின் வடகிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் மித முதல் கனமழை பெய்ய கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.