பாலஸ்தீனத்தை ஐ.நா உறுப்பினராக்க 143 நாடுகள் ஆதரவு
பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேலின் போர் 7 மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது.
இப்போரை நிறுத்த கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது.
இந்த நிலையில் ஐ.நா. பொதுச்சபையில் பாலஸ்தீனத்தை முழு நேர உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்று அரபு நாடுகள் கூட்டமைப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தன. இதையடுத்து ஐ.நா. பொதுச்சபையின் அவசர கூட்டம் நடந்தது.
இதில் பாலஸ்தீனத்தை ஐ.நா. பொதுச்சபையில் முழு நேர உறுப்பினராக சேர்ப்பது தொடர்பாக வரைவு தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடந்தது. தீர்மானத்திற்கு இந்தியா உள்பட 143 நாடுகள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தன.
அமெரிக்கா, இஸ்ரேல் உள்பட 9 நாடுகள் எதிராக வாக்களித்தன. 25 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன. இதற்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
ஐ.நா.வுக்கான இஸ்ரேல் தூதர் கிலாட் எர்டன் பேசும்போது, இந்த தீர்மானம் ஐ.நா சாசனத்தின் தெளிவான மீறல் என்றார்.மேலும் தீர்மான நகலை கிழித்தார். காகிதங்களை கிழிக்கும் கருவியில் தீர்மான நகலை போட்டார்.
பாலஸ்தீனத்தை முழு நேர உறுப்பினராக்க ஐ.நா. பொதுச்சபையில் ஆதரவு கிடைத்துள்ள நிலையில் பாதுகாப்பு கவுன்சில் முடிவு எடுக்க உள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டு முதல் பாலஸ்தீனம் ஐக்கிய நாடுகள் அவையில் உறுப்பினர் அல்லாத பார்வையாளராக மட்டும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.