சுலோவேக்கியா பிரதமரை தாக்கிய நபர் குறித்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்
மத்திய ஐரோப்பிய நாடான சுலோவேக்கி யாவின் பிரதமர் ராபர்ட் பிகோ நேற்று ஹன்ட்லோவா நகரில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு வெளியே வந்தார்.
அவர் அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடம் பேசி கொண்டிருந்தார். அப்போது பிரதமர் ராபர்ட் பிகோ மீது ஒருவர் துப்பாக்கியால் சுட்டார்.
அந்த நபர் 5 முறை சுட்டார். இதில் உடலில் குண்டு பாய்ந்த ராபர்ட் பிகோ சுருண்டு விழுந்தார். உடனே துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
படுகாயம் அடைந்த பிரதமர் ராபர்ட் பிகோவை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவருக்கு வயிறு மற்றும் மூட்டு பகுதியில் குண்டு பாய்ந்து இருந்தது.
இதற்கிடையே பிரதமர் ராபர்ட் பிகோ ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாகவும், அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் பிரதமர் ராபர்ட் பிகோவை துப்பாக்கியால் சுட்ட நபர் குறித்த அடையாளம் தெரிய வந்தது. அவர் 71 வயதான எழுத்தாளர் என்றும், அவர் துஹா என்ற இலக்கியக் கழகத்தின் நிறுவனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
லெவிஸ் நகரைச் சேர்ந்த அவர் ஸ்லோவாக் எழுத்தாளர்களின் சங்கத்தில் உறுப்பினராக உள்ளார். மூன்று கவிதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.