ஆப்கானிஸ்தானில் ஸ்பெயினைச் சேர்ந்த 3 பேர் உட்பட 6 பேர் மரணம்
மத்திய ஆப்கானிஸ்தானில் உள்ள பாமியான் மாகாணத்தில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஆறுபேர் உயிரிழந்தனர்.
இதில் 3 பேர் ஸ்பெயின் நாட்டைச் சேரந்தவர்கள். துப்பாக்கிச்சூடு பிரபலமான சுற்றுலா பகுதியில் நடைபெற்றது.
இது தொடர்பாக ஏழு பேரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும். பொறுப்பேற்கவில்லை.
உயிரிழந்த வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் குறித்து ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தகவல் வெளியிடாத நிலையில், ஸ்பெயின் வெளியுறவுத்துறை அமைச்சகம், தங்கள் நாட்டைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் காயம் அடைந்துள்ளார் எனத் தெரிவித்துள்ளது.
காயம் அடைந்தவர் காபுல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவர் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
தலிபான் அரசுக்கு எதிரான குழுக்கள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அவர்கள் பள்ளிகள், மருத்துவமனைகள், மசூதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறியது.