ஈரான் ஜனாதிபதி உயிரிழப்பு : 05 நாள் துக்கம் அனுசரிப்பு!
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து ஈரான் நாட்டில் 5 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அந்நாட்டின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அல் கமேனி அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்று (19) இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் ஜனாதிபதி ரைசியுடன் ஈரானின் வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாவும் உயிரிழந்துள்ளார்.
அஜர்பைஜானில் இருந்து நாடு திரும்பிய ஜனாதிபதி மற்றும் 9 பேர் பயணித்த ஹெலிகாப்டரில் விபத்துக்குள்ளானது.
குறித்த பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. 63 வயதான ரைசி, நாட்டின் அடுத்த ஆன்மீகத் தலைவராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
விபத்தில் உயிரிழந்த ஜனாதிபதி மற்றும் ஏனையவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஈரானிய செஞ்சிலுவைச் சங்கம் இன்று அறிவித்துள்ளது. இதனால், அது தொடர்பான பணிகள் நிறுத்தப்பட்டன.
உயிரிழந்த ஜனாதிபதியின் இறுதிக் கிரியைகள் நாளை (21) தப்ரிஸ் பகுதியில் இடம்பெறவுள்ளன.
இந்நிலையில், நிவாரணக் குழுவினர் மீட்பு மற்றும் உடல்களை கொண்டு வருவது தொடர்பான புகைப்படங்களை ராய்ட்டர்ஸ் செய்தி சேவை வெளியிட்டிருந்தது.