ஜனாதிபதியை சந்தித்த சீன பிரதிநிதிகள் : அரசாங்கத்துடன் பூரண ஒத்துழைப்பை வழங்க இணக்கம்!
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் சர்வதேச திணைக்களத்தின் பிரதி அமைச்சர் சன் ஹையான் தலைமையிலான சீன பிரதிநிதிகள் நேற்று (25.11) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை சந்தித்தனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்கவின் வெற்றிக்கும், பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சி அமோக வெற்றி பெற்றதற்கும் வாழ்த்து தெரிவித்த சீன பிரதி அமைச்சர், அந்த வெற்றிகளின் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பாராட்டினார்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் இலங்கையுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் செயற்பட சீனா தயாராக இருப்பதாகவும் பிரதியமைச்சர் தலைமையிலான குழுவினர் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.
சீனா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளின் அபிவிருத்தி வாய்ப்புகள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன் இரு நாடுகளுக்கும் இடையில் பரஸ்பர நன்மை பயக்கும் நீண்ட கால ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தை ஏற்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.