மன்னாரில் சீரற்ற வானிலை காரணமாக 48 ஆயிரத்து 295 பேர் பாதிப்பு!
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக இதுவரை 48 ஆயிரத்து 295 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 2049 நபர்கள் 22 பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.
-மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று (26.11) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக பெய்து வரும் கடும் மழை காரணமாகவும் தற்போது வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த நிலைமை காரணமாக மேலும் வலுவடைந்துள்ளது.
தற்போதைய நிலைமையின் படி மன்னார் மாவட்டத்தில் 13 ஆயிரத்து 860 குடும்பங்களைச் சேர்ந்த 48 ஆயிரத்து 295 நபர்கள் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகரம்,மடு,மாந்தை மேற்கு,நானாட்டான் ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் வெள்ள நிலைமை காரணமாக பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 22 பாதுகாப்பு மையங்களில் 589 குடும்பங்களைச் சேர்ந்த 2049 நபர்கள் தங்க வைக்கப்பட்டு,அவர்களுக்கு சமைத்த உணவுகளை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.