கேரளாவில் இருந்து இறக்குமதியாவது பூநகரி மொட்டை கறுப்பன் அரிசி அல்ல
உலகில் இருக்கின்ற பல பொருட்களுக்கும் வர்த்தக குறியீடுகள் மற்றும் புவிசார் குறியீடுகள் காப்புரிமைகள் உள்ளது. அந்த வகையில் எமது நாட்டில் இருந்து விளையக்கூடிய மொட்டைக் கருப்பன் என்கின்ற பாரம்பரிய நெல் இனம் பூநகரியில் விளையும் பொழுது அதைப் பூநகரி மொட்டைக் கருப்பன் என்று கூறுவார்கள்.
விளைகின்ற இடத்தைப் பொறுத்து அதனுடைய தரம் வேறுபடுகின்றது. குறிப்பிட்ட சூழலில் விளைகின்ற பொழுது அதில் சில சிறப்புத் தன்மைகள் இருக்கின்றது. அந்த வகையில் உலகின் பல பொருட்களுக்கும் புவிசார் குறியீடுகள் உள்ளது.
அதேபோல் நமது நாட்டின் வடக்கில் நெல் விளையும் பூமியாகிய பூநகரியில் இருந்து விளைகின்ற மொட்டைக் கருப்பன் நெல்லுக்கும் புவிசார் குறியீட்டை நாம் பதிவு செய்து கொள்ள முடியும்.
இந்தப் பூநகரி மொட்டை கருப்பன் என்கின்ற பெயர் நமது நாட்டுக்கு உரிய சிறப்பு. இந்தப் பெயரில் கேரளாவில் இருந்து அரிசியை இறக்குமதி செய்து, இங்கே விற்கின்ற பொழுது இதைப்பற்றி நன்கு அறிந்த எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது. காரணம் பூநகரி மொட்டை கருப்பனின் தரம் எனக்கு நன்கு தெரியும்.
ஏனெனில் அந்த மண்ணின் தன்மையைப் பொறுத்து அதன் தரம் சிறப்புப் பெறும். இன்று வெளிநாட்டுக்கடைகளில் விற்கப்படுகின்ற பூநகரி மொட்டை கருப்பன் என்கின்ற அரிசி கேரளாவில் இருந்தே வருகிறது. (ஒருவேளை கேரளாவில் பூநகரி என்கின்ற ஓர் இடம் இருந்து அந்த இடத்தில் இருந்து அந்த அரிசி வந்து இருந்தால் கூட அது எமது பூநகரியில் விளைகின்ற அரிசியின் தரத்திற்கு ஈடாகாது).
இதற்கான புவிசார் குறியீட்டுக் காப்புரிமையை நாம் எடுக்கும் பொழுது பூநகரியில் இருந்து விளைகின்ற நெல்லை மட்டுமே பூநகரி மொட்டைக் கருப்பன் என்று விற்க முடியும். இதன் மூலம் நமது நாட்டிற்கும் நமது விவசாயிகளுக்கும் பூநகரிக்கும் ஒரு மிகப்பெரும் பெருமை சேரும்.
அதேவேளை ஒரு சிறப்பான வியாபாரச் சந்தையை நாம் ஈட்டி எமது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும். இதற்காகப் பூநகரி விவசாயிகள் ஒன்றிணைந்து தமது உரிமையான புவிசார் குறியீட்டைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதை மேலெழுந்தவாரியாகப் பார்க்கும் பொழுது இது ஏதோ மிகச் சாதாரணமாகத் தெரியும்.
ஆனால் இது முதலில் இலங்கை அளவில் பதிவு செய்யப்படும். பின்பு உலக அளவில் புவிசார் குறியீடுகள் எங்கெங்கே, என்னத்திற்கு உள்ளது என்று தேடும் பொழுது நமது மண்ணும், நமது நாடும், நமது பெருமையும் உலகளாவிய ரீதியாகக் கருத்தில் கொள்ளப்படும்.
இதை விஞ்ஞான ரீதியாக ஆராய்வதற்கு எதிர்காலத்தில் உலகத்தின் பல பாகங்களில் இருந்தும் ஆராய்ச்சியாளர்கள் வந்து, அதன் சிறப்பு அம்சத்தை ஆராய்ந்து வெளியிடும் பொழுது, இதன் மதிப்பு இன்னும் பல மடங்கு ஆகும்.
ஆகவே இப்படியான ஒரு முயற்சி என்பது எமக்கு மிக அவசியம் என்பதை இங்கே வலியுறுத்தி எல்லோரும் அதற்கான முயற்சியைச் செய்ய வேண்டும் என்று தாழ்மையோடு கேட்டுக் கொள்கின்றேன்.
இதைத் தனியே பூநகரிக்கு மட்டும்தான் செய்ய வேண்டும் என்று இல்லை. நமது நாட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு சிறப்புமிக்க உற்பத்திகளுக்கும் செய்யலாம் உதாரணம் மட்டுவில்க் கத்தரிக்காய்.