இலங்கைக்கு வரும் சீன வெளியுறவு அமைச்சர்! முக்கிய முயற்சிகள் குறித்து அறிவிப்பு
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, இலங்கைக்கு இரண்டு நாள்கள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
எதிர்வரும் 13 மற்றும் 14ஆம் திகதிளில் அவர் இலங்கையில் தங்கியிருப்பார். இலங்கை வரும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, முக்கிய கொள்கை அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும் முக்கிய பொருளாதார முயற்சிகள் குறித்து அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
சீன முதலீடுகள், புதிய பொருளாதார ஒத்துழைப்பு திட்டங்கள் மற்றும் முன்மொழியப்பட்ட இலங்கை – சீன சுதந்திர வர்த்தக உடன்பாட்டின் முன்னேற்றம் ஆகியன குறித்தும் அவர் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் ஏனைய மூலோபாய உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு முயற்சிகள் போன்ற பெரியளவிலான அபிவிருத்தித் திட்டங்கள் குறித்த அறிவிப்புகளும் எதிர்பார்க்கப்படுகின்றன.
இந்தப் பயணத்தின் போது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் மூத்த அரச தலைவர்கள், ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா ஆகியோருடன் சீன வெளியுறவு அமைச்சர் இரு தரப்பு கலந்துரையாடல்களை நடத்துவார்.
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, சீன – இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65 ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக, 2022 ஆம் ஆண்டு ஜனவரியில் கடைசியாக இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”