மட்டக்களப்பை சிங்களமயமாக்க திட்டம் - இரா. சாணக்கியன் மீது குற்றச்சாட்டு!

#SriLanka #sanakkiyan #Gajenthirakumar #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 month ago
மட்டக்களப்பை சிங்களமயமாக்க திட்டம் - இரா. சாணக்கியன் மீது குற்றச்சாட்டு!

மட்டக்களப்பில் எல்லைக் கிராமங்களைச் சிங்களமயமாக்கும் திட்டத்தை இரா. சாணக்கியன் வகுத்துள்ளாரா என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார்.

வடக்கில் எம்.ஏ. சுமந்திரன் போல, கிழக்கில் இரா. சாணக்கியன் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களை மிரட்டி பணியவைத்து இந்த திட்டங்களை அமல்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

மட்டக்களப்பு எல்லைக் கிராமமான வடமுனை - ஊத்துச்சேனை மக்களைச் சந்திக்கும் நிகழ்வு நேற்று (10) கட்சியின் தேசிய அமைப்பாளர் த. சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  “தமிழர்கள் வடகிழக்கில் பெரும்பான்மையாக இருக்க கூடாது. என்பதனால் பிரித்தானியர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறிய நாளில் இருந்து குடியேற்றங்களை செய்து கொண்டு வருகின்றனர்.

கிழக்கு மாகாணத்தை முழுமையாகச் சிங்களமயமாக்குவதற்கு மட்டக்களப்பு ஒரு தடையாக உள்ளது. ஏனெனில் அது கிழக்கின் இதயமாக இருக்கிறது. அதனை நேரடியாக மாற்றுவது கடினம் என்பதால், மட்டக்களப்பின் இரு எல்லைகளான அம்பாறை மற்றும் திருகோணமலையை முதலில் முழுமையாகச் சிங்களமயமாக்கி, மட்டக்களப்பைத் தனிமைப்படுத்திய பின்னர் அங்கு கைவைக்கலாம் என்பதே அரசாங்கத்தின் திட்டம்.

"யுத்தம் தொடங்குவதற்கு முன்னரே கிழக்கின் எல்லைகளைச் சிங்களமயமாக்கும் வேலைத்திட்டம் ஓரளவு பூர்த்தியடைந்திருந்தது. இதனால்தான், தமிழ் மக்களின் தேச அந்தஸ்தை அங்கீகரித்து, எங்களை நாங்களே ஆளக்கூடிய சமஷ்டி தீர்வை வழங்க வேண்டும் அல்லது பிரிந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற 1977 ஆம் ஆண்டு 'வட்டுக்கோட்டை தீர்மானத்தை' எடுத்தோம்.

விடுதலைப் புலிகளின் போராட்ட காலத்தில் இத்தகைய குடியேற்றங்களைப் பெரிய அளவில் செய்ய முடியவில்லை. ஆனால், 2009 இற்கு பிறகு போராட்டத்தின் சக்தியாக இருந்த மக்களை அழித்து இனப்படுகொலை செய்த பின்னர், இன்று மட்டக்களப்பில் கைவைக்கத் தொடங்கியுள்ளனர். இதுதான் கசப்பான உண்மை." "கிழக்கில் போராட்டம் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரையைக் கைப்பற்ற ராஜபக்ச தரப்பினர் 'மாதுறு ஓயா வலதுகரை அபிவிருத்தித் திட்டத்தை' ஆரம்பித்தனர். சோளச் செய்கை என்ற பெயரில் போலி உறுதிகளை வழங்கி, சட்டவிரோதச் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தினர். 

இதன் விளைவாகவே பண்ணையாளர்களுக்கும் குடியேற்றவாசிகளுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன. இதே திட்டம்தான் தற்போது ஊத்துச்சேனை கிராமத்திலும் முன்னெடுக்கப்படுகிறது. இந்த அநியாயத்தை மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏன் முதன்முதலில் வெளிப்படுத்தவில்லை? யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் இங்கு வந்து நிலைமையை நேரில் பார்த்த பின்னரே, இது ஊடகங்கள் வாயிலாக வெளிச்சத்திற்கு வந்தது." 

 "சிங்களமயமாக்கல் திட்டத்திற்கு எதிர்ப்பு இல்லாமல் ஒரு கட்டம் வரை கொண்டு செல்வதற்காகவே இந்த மண்ணைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைதி காக்கின்றனரா? அவர்கள் அமைதியாக இருந்தால் மட்டுமே, யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் செ. கஜேந்திரனோ அல்லது கஜேந்திரகுமாரோ இது குறித்துப் பேசும்போது, 'தேவையில்லாத பிரச்சினையைக் கிளப்புகிறார்கள்' என்று பொய்களைச் சொல்லிச் சிறுமைப்படுத்தி, உண்மையை மூடி மறைக்க முடியும் என நினைக்கிறார்கள் போலும். 

 மக்களிடம் வாக்குக் கேட்கும் அவர்கள், உங்கள் பிரச்சினைகளை முன்னின்று தீர்க்க வேண்டிய பொறுப்புடையவர்கள். ஆனால் அவர்கள் ஏன் மௌனமாக இருக்கிறார்கள்? அவர்களும் இதற்குத் துணை போகிறார்களா? வடக்கில் சுமந்திரன் செய்வது போல, கிழக்கில் சாணக்கியன் மற்ற பாராளுமன்ற உறுப்பினர்களை மிரட்டி அடக்கி, சிங்களமயமாக்கலுக்குத் துணை போகிறாரா? தமிழரசு கட்சி சார்பில் தமிழ் தேசியம் பேசித் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களிடமே நான் இந்தக் கேள்வியைக் கேட்கிறேன்." 

 "பாதிக்கப்பட்ட எல்லைப் பிரதேசங்களில் உள்ள மக்களைத் தக்கவைத்தால் மட்டுமே இந்த மண்ணைப் பாதுகாக்க முடியும். நீங்கள் உங்கள் நிலங்களை விட்டு வெளியேறினால் நிலப்பரப்பு சுருங்கும். இதுதான் எதிரியின் விருப்பம். எல்லையில் வாழும் மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, அவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்தால் மட்டுமே அவர்கள் அங்கு நிலைத்து நிற்பார்கள். எமது அரசியல் தமிழ்த் தேசத்தைப் பாதுகாப்பதாக இருந்தால், முதலில் எல்லைகள் பாதுகாக்கப்பட வேண்டும். மக்கள் எங்குப் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்களோ, அங்கு நேரில் சென்று அந்தப் பிரச்சினைகளை உலகிற்கு வெளிப்படுத்துவோம் என நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம்” என தெரிவித்தார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )




இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4