மட்டக்களப்பிற்கு புதிய பேருந்துகள் மற்றும் பணியாளர்கள்: அமைச்சர் உறுதி!
இன்றைய தினம் (25.06.2026) பாராளுமன்ற கேள்வி-பதில் நேரத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தின் பொதுப் போக்குவரத்து சேவைகள் தொடர்பாக நான் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போக்குவரத்து அமைச்சர், அரசாங்கம் கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ள 600 புதிய பேருந்துகளில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் பேருந்துகள் வழங்கப்படுவதோடு, அவற்றுக்குத் தேவையான சாரதிகள் மற்றும் நடத்துநர்களையும் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இதன்போது நான் மேலதிகக் கேள்விகளை எழுப்பியபோது, மாகாணங்களுக்கிடையிலான பேருந்து போக்குவரத்து சேவையை மேலும் விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் அவசியம் என்பதை வலியுறுத்தினேன்.
அதேவேளை, இலங்கை போக்குவரத்துச் சபையும் தனியார் பேருந்து சேவைகளும் இணைந்து முன்னெடுத்து வரும் ஒன்றிணைந்த போக்குவரத்து சேவை தொடரப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினேன்.
இந்த முறைமை நீக்கப்பட்டால் போட்டித்தன்மை அதிகரித்து, சாலை விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும். எனவே, ஒன்றிணைந்த போக்குவரத்து சேவையைப் பாதுகாத்து முன்னெடுப்பதில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தேன்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது நடைமுறையில் உள்ள சிசுசரிய (Sisu Seriya) சேவையை மேலும் விரிவுபடுத்த வேண்டிய அவசியம் இருப்பதையும் எடுத்துக்காட்டினேன். போதுமான அளவில் பேருந்துகள் இல்லாத காரணத்தால், இந்த சேவையின் வழங்கலில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்பதையும் குறிப்பிட்டேன்.
மேலும், மட்டக்களப்பு, வாழைச்சேனை மற்றும் களுவாஞ்சிக்குடி ஆகிய டிப்போக்கள் நீண்டகாலமாக புனரமைக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளன என்பதை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தேன்.
கடந்த காலங்களில் சிலர் தங்களது சொந்தப் பகுதிகளில் உள்ள டிப்போக்களின் அபிவிருத்தியில் அதிக கவனம் செலுத்தியதால், மட்டக்களப்பு மாவட்டத்தின் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பு பின்தங்கியுள்ளதாக சுட்டிக்காட்டினேன்.
ஆகையால், மட்டக்களப்பு, வாழைச்சேனை மற்றும் களுவாஞ்சிக்குடி ஆகிய மூன்று பிரதான டிப்போக்களையும் உடனடியாக புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன். அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட தூர சேவைகளில் ஈடுபடும் பல பேருந்துகளின் தரம் திருப்திகரமாக இல்லை என்பதையும் சுட்டிக்காட்டினேன்.
அரசாங்கம் புதிதாக 600 பேருந்துகளை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ள நிலையில், அவற்றில் ஒரு பகுதியை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன்.
அதேபோன்று, கிழக்கு மாகாணத்திலும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் பெருமளவான இளைஞர்கள் பேருந்து சாரதி மற்றும் நடத்துநர் பணிகளுக்காக விண்ணப்பித்திருந்த போதிலும், இதுவரை பலருக்கு நியமனங்கள் வழங்கப்படவில்லை என்பதையும் எடுத்துரைத்தேன்.
இதனால் நிலவும் பணியாளர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டேன்.
எனது கோரிக்கைகளுக்கு பதிலளித்த அமைச்சர், புதிய பேருந்துகள் வழங்கப்படுவதோடு தேவையான பணியாளர்களையும் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே