மூளைக்காய்ச்சல் பரவல் : கட்டுப்படுத்த உதவும் வகையில் விசேட வழிக்காட்டுதல்கள் வெளியீடு!
மூளைக்காய்ச்சல் பரவுவதைக் கட்டுப்படுத்தவும் தடுக்கவும் உதவும் நோக்கில், சுகாதார அமைச்சகத்தின் நோய்ப்பரவல் ஆய்வுப் பிரிவு, அனைத்து சுகாதார அதிகாரிகளுக்கும் சிறப்பு வழிக்காட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
விசேட வழிகாட்டுதல்களின் படி நோயினை கண்டறிதல், வகைப்படுத்தல், மற்றும் தடுப்பு நடவடிக்கைகள், பொது சுகாதார நடைமுறைகள், பாடசாலைக்கான நடைமுறைகள், மாதிரி சேகரிப்பு மற்றும் ஆய்வக சோதனைகள், மருத்துவ நடைமுறைகள், சமூக அளவிலான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், திருவிழா மற்றும் சமூக வழிகாட்டுதல்கள் போன்றவை அடங்கும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கையாக சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை நன்கு கழுவுதல் , இருமல் அல்லது தும்மும்போது வாய் மற்றும் மூக்கை முழங்கையால் அல்லது கைக்குட்டை/திசுவால் மூடுவது, அறிகுறிகள் உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்ப்பது, வீடுகளில் சரியான காற்றோட்டத்தை உறுதி செய்வது போன்ற விடயங்களை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முக்கியமாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் இந்நோய் பரவுவதை அவதானித்துள்ளதாகவும் தொற்றுநோயியல் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், காய்ச்சல், தலைவலி மற்றும் வாந்தி ஆகியவை முக்கிய அறிகுறிகளாகும், மேலும் மூளைக்காய்ச்சல் 7 நாட்களுக்குள் சரியாகிவிடும் என்று தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
நீர், உணவு மற்றும் நோயாளியின் இருமல் அல்லது தும்மும்போது வெளியாகும் நீர்த்துளிகள் மூலமாகவும், நெருங்கிய தொடர்பு மூலமாகவும், வைரஸ் பரவுவதாகவும் அத்துடன் 3 முதல் 7 நாட்களுக்குள் அறிகுறிகள் தென்படுவதாகவும் சுவாச மண்டலம் வழியாக நோய் பரவுவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் திணைக்களத்தின் பிரதான தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் பாலித கருணாபேம தலைமையிலான தொற்றுநோயியல் நிபுணர்கள் குழு இந்த அறிவுறுத்தல்களை தயாரித்துள்ளது.
(வீடியோ இங்கே )