மட்டக்களப்பில் தனியார் வங்கி ஒன்றில் தீ விபத்து: பொலிஸார் தீவிர விசாரணை!
மட்டக்களப்பு நகர் பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் வங்கி கிளை ஒன்றில் இன்று (30) காலை ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று காலை வங்கியின் செயற்பாடுகள் ஆரம்பமாவதற்கு முன்னர், திடீரென வங்கியின் உட்பகுதியிலிருந்து பலத்த புகையுடன் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இதனை அவதானித்த வங்கியின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினருக்கும், மட்டக்களப்பு தலைமையக பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.
விரைந்து செயற்பட்ட தீயணைப்பு பிரிவினர் தகவல் கிடைத்த உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள், வங்கியின் ஏனைய பகுதிகளுக்கு தீ பரவாதவாறு தீவிர போராட்டத்திற்கு மத்தியில் தீயை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீயணைப்பு பிரிவினரின் இந்த விரைவான மற்றும் சாதுரியமான நடவடிக்கையினால் வங்கியிலிருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்படவிருந்த பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்துக்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. எனினும், முதற்கட்ட விசாரணைகளின்படி மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தீ விபத்தினால் ஏற்பட்டுள்ள சொத்துச் சேத விபரங்கள் மதிப்பிடப்பட்டு வருவதுடன், மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் த தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே )