இன்று காலை அவசரக் கூட்டம்: பேருந்து சங்கங்களின் அடுத்தகட்ட அதிரடி முடிவு!
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, பேருந்துக் கட்டணங்களை 5% இனால் உடனடியாக உயர்த்த வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் (LPBOA) தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் (NTC) கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போதைய டீசல் விலை உயர்வுக்கு ஈடுகொடுக்க வேண்டுமாயின், பேருந்தின் குறைந்தபட்சக் கட்டணத்தை 32 ரூபாய் அல்லது 33 ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த மாத எரிபொருள் விலை மாற்றத்திலிருந்தே தனியார் பேருந்து உரிமையாளர்கள் கடும் நட்டத்தை எதிர்கொண்டு வருவதாகவும், தற்போது ஒரு பயணத்திற்கு (per trip) சுமார் 25 ரூபாய் வரை நட்டம் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வழக்கமாக பேருந்துக் கட்டண திருத்தம் ஆண்டுதோறும் ஜூலை மாதமே நடைபெறும். ஆனால், தற்போதைய கடுமையான பொருளாதாரச் சுமையைக் கருத்திற்கொண்டு, அதற்கு முன்னதாகவே (இடைக்காலக் கட்டணத் திருத்தமாக) இந்த 5% உயர்வை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அரசாங்கத் தரப்பிலிருந்தோ அல்லது தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடமிருந்தோ (NTC) இதுவரை சாதகமான பதில்கள் எதுவும் கிடைக்காத நிலையிலேயே, இன்றைய அவசரக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
இன்றைய கலந்துரையாடலின் போது கட்டண அதிகரிப்புக்கான அனுமதி கிடைக்காவிடின், சேவைகளிலிருந்து தற்காலிகமாக விலகி நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுப்பது குறித்தே பேருந்து சங்கங்கள் இறுதித் தீர்மானத்தை அறிவிக்கவுள்ளன.
(வீடியோ இங்கே )