RAP பாடகர் பயங்கரவாதி என கைது: ஐரோப்பிய ஒன்றிய அதிகாரியிடம் சிவில் சமூகம் குற்றச்சாட்டு!

#SriLanka #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 days ago
RAP பாடகர் பயங்கரவாதி என கைது: ஐரோப்பிய ஒன்றிய அதிகாரியிடம் சிவில் சமூகம் குற்றச்சாட்டு!

பிரஸ்ஸல்ஸ், பெல்ஜியம் – 11 ஜூன் 2026 ஐரோப்பிய வெளிநாட்டு நடவடிக்கை சேவையின் (EEAS) தெற்காசியப் பிரிவின் (ASIAPAC) தலைவரான திரு. சார்ல்ஸ் வைட்லி அவர்களை பிரஸ்ஸல்ஸில் சந்தித்து, இலங்கையிலும் குறிப்பாக தமிழ் மக்களையும் பாதித்து வரும் பல்வேறு அரசியல், மனித உரிமை மற்றும் நல்லாட்சிசார் விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடினேன்.

திரு. சார்ல்ஸ் வைட்லி அவர்கள் இலங்கை உட்பட தெற்காசிய நாடுகளுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் உறவுகளை மேற்பார்வையிடும் முக்கிய அதிகாரி ஆவார்.

மனித உரிமைகள், நல்லாட்சி, GSP+ வர்த்தகச் சலுகை, அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு போன்ற விடயங்களில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைகளை வடிவமைப்பதில் அவர் முக்கிய பங்காற்றி வருகின்றார்.

இந்த சந்திப்பில் நான் முக்கியமாக முன்வைத்த விடயங்களில் ஒன்றாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) தொடர்ச்சியான பயன்பாடும், அதன் கீழ் தமிழ் RAP பாடகரான கணேஷ்குமார் சங்கீத்சன் (ஹிப் ஹொப் சங்கி) கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள விவகாரமும் அமைந்தது. 

இந்த கைது சம்பவம் தொடர்பாக எனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியதுடன், இது கருத்துச் சுதந்திரம், ஜனநாயக உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் மீது ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் குறித்தும் சுட்டிக்காட்டினேன்.

சந்திப்பின்போது, ஹிப் ஹொப் சங்கி அவர்களின் கைது தொடர்பாக தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் எழுதிய கடிதத்தையும் திரு. சார்ல்ஸ் வைட்லி அவர்களிடம் கையளித்தேன்.

அதேவேளை, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற எங்களுடைய நீண்டகால நிலைப்பாட்டையும் மீண்டும் வலியுறுத்தினேன்.

அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசுகள் இந்தச் சட்டத்தை நீக்குவதாக பலமுறை உறுதியளித்த போதிலும், குறிப்பாக தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக இந்தச் சட்டம் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவது மிகுந்த கவலைக்குரிய விடயமாகும் என்பதை எடுத்துரைத்தேன்.

சட்டத்தின் பெயரால் அடிப்படை உரிமைகள் கட்டுப்படுத்தப்படுவதும், கருத்து வெளியிடும் சுதந்திரம் பாதிக்கப்படுவதும் ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல என்பதையும் குறிப்பிட்டேன்.

மேலும், PTA சட்டத்தின் தொடர்ச்சியான பயன்பாடு, ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ வர்த்தகச் சலுகைத் திட்டத்தின் கீழ் இலங்கை ஏற்றுக்கொண்டுள்ள சர்வதேச மனித உரிமை கடமைகளுடன் நேரடியாக தொடர்புடையது என்பதையும் சுட்டிக்காட்டினேன்.

ஹிப் ஹொப் சங்கி உள்ளிட்ட பலர் இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்படுவது, GSP+ தகுதிக்கான அடிப்படையாக அமைந்துள்ள மனித உரிமை உறுதிப்பாடுகளை இலங்கை உண்மையில் நடைமுறைப்படுத்துகிறதா என்ற தீவிரமான கேள்விகளை எழுப்புகின்றது என்பதையும் வலியுறுத்தினேன்.

PTA சட்டத்தை ரத்து செய்வதாக பலமுறை வழங்கப்பட்ட அரசாங்க உறுதிமொழிகள் இன்னமும் நிறைவேற்றப்படாத நிலையில், அதன் தொடர்ச்சியான பயன்பாடு அடிப்படை உரிமைகள், கருத்துச் சுதந்திரம், உரிய சட்ட நடைமுறை மற்றும் ஜனநாயக ஆட்சி தொடர்பான இலங்கையின் சர்வதேச உறுதிப்பாடுகளை பலவீனப்படுத்துவதாகவும் எடுத்துக்கூறினேன்.

இதேவேளை, நீண்டகாலமாக நடத்தப்படாமல் தாமதிக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டிய அவசியத்தையும் சந்திப்பில் வலியுறுத்தினேன். தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வும், செயல்பாட்டு ஜனநாயக பிரதிநிதித்துவமும் அத்தியாவசியமானவை என்பதை தெளிவுபடுத்தினேன்.

நடைபெற்று வரும் அரசியலமைப்புச் சீர்திருத்த முயற்சிகள் தொடர்பாகவும் கருத்துக்களை பகிர்ந்துகொண்டேன். எதிர்கால அரசியலமைப்பு ஏற்பாடுகள் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், சமத்துவம் மற்றும் அவர்களின் நியாயமான அபிலாஷைகளைப் பாதுகாக்கும் வகையில் அமைய வேண்டியது அவசியம் என்பதை சுட்டிக்காட்டினேன்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினையும் சந்திப்பில் முக்கியமாக எடுத்துரைக்கப்பட்டது. பல ஆண்டுகளாக தங்களது அன்புக்குரியவர்களைத் தேடி உண்மை மற்றும் நீதி கோரி போராடி வரும் குடும்பங்களின் நிலை குறித்து கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டேன். 

சர்வதேச தரநிலைகளுக்கு அமைவாக பொறுப்புக்கூறல், நம்பகமான உண்மையறிதல் செயல்முறைகள் மற்றும் நீதியை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் அவசியம் என்பதையும் வலியுறுத்தினேன்.

தமிழர் பெரும்பான்மை பகுதிகளில் தொடர்ந்தும் நிலவி வரும் காணி ஆக்கிரமிப்பு பிரச்சினையையும் முன்வைத்தேன். கணிசமான அளவிலான காணிகள் இன்னும் இராணுவம் மற்றும் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாக சுட்டிக்காட்டியதுடன், அவை விரைவாக விடுவிக்கப்பட்டு உரிய உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தேன். இடம்பெயர்ந்த குடும்பங்கள் தங்களது சொந்த நிலங்களுக்கு மீண்டும் திரும்பி குடியேறவும், வாழ்வாதாரங்களை மீள உருவாக்கிக்கொள்ளவும், கண்ணியத்துடன் வாழ்வை மீளக் கட்டியெழுப்பவும் காணி விடுவிப்பு அவசியமான முன்னெடுப்பாகும் என்பதையும் தெரிவித்தேன்.

தமிழ் மக்களின் நியாயமான அரசியல், மனித உரிமை மற்றும் சமூக நீதி சார்ந்த கோரிக்கைகளுக்கு நிலையான தீர்வுகளை எட்டுவதற்கு சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான ஈடுபாடு மிகவும் முக்கியமானது என்பதை மீண்டும் வலியுறுத்தினேன்.

இந்த விடயங்கள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதையும் வரவேற்றதுடன், எதிர்காலத்திலும் இந்த ஈடுபாடு தொடரும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினேன்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4