பல மாத கால போரை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தம்: 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே உலகளாவிய ரீதியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள முக்கிய புரிந்துணர்வு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) சமூக வலைத்தளப் பக்கத்தில் இத்தகவலைப் பகிர்ந்துள்ள அவர், வரும் ஜூன் 19 ஆம் திகதி சுவிட்சர்லாந்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பல மாதங்களாக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே நீடித்து வந்த போர்ப் பதற்றத்தையும் மோதல்களையும் இந்த உடன்படிக்கை முடிவுக்குக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்பந்தத்தின் முக்கிய அங்கமாக, சர்வதேச எண்ணெய் விநியோகத்தின் பிரதான பாதையான ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) உடனடியாக மீண்டும் திறக்கப்படவுள்ளது.
அங்குள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் நிறைவடைந்ததும், அமெரிக்க கடற்படையின் முற்றுகை முழுமையாக விலக்கப்பட்டு, சுங்கவரி அல்லது எவ்வித கட்டணங்களும் இல்லாத சுதந்திரப் பாதையாக இந்நீரிணை மாற்றப்படும் என ஜனாதிபதி ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.
இதேவேளை, இராஜதந்திர முயற்சிகளை முறியடிக்கும் வகையில் லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள ட்ரெம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது பார்வையில் "மிகவும் கடினமான ஒரு நபர்" என்றும் சாடியுள்ளார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உடன்பாட்டிற்கு அமெரிக்காவின் ஆளும் குடியரசுக் கட்சியினர் பலரும் பாராட்டு தெரிவித்து வரும் அதேவேளை, செனட்டர் லிண்ட்சே கிரஹாம் உள்ளிட்ட சிலர் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.
அமெரிக்க குழுவின் நிலைப்பாட்டிற்கும் ஈரானின் பார்வைக்கும் இடையே முரண்பாடுகள் இருப்பதாகக் கவலை வெளியிட்டுள்ள கிரஹாம், இந்த 60 நாள் பேச்சுவார்த்தைக் காலத்தின் பின்னர் எட்டப்படும் இறுதி ஒப்பந்தம், கட்டாயம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் (Congress) மறுஆய்வு மற்றும் வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதிக்கு நினைவூட்டியுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே