திருகோணமலையில் கன்சைட் ரகசிய தடுப்பு முகாமிற்கு கள ஆய்வு செய்ய திட்டம்

#SriLanka #Trincomalee #Investigation #Tamil People #Prison #Lanka4 #L4
Prasu
1 hour ago
திருகோணமலையில் கன்சைட் ரகசிய தடுப்பு முகாமிற்கு கள ஆய்வு செய்ய திட்டம்

நாளை திருகோணமலை நீதவான் மேற்கொள்ளவுள்ள கன்சைட் (Gunsite) இரகசிய தடுப்பு முகாம் தொடர்பான கள ஆய்வு, இலங்கையின் காணாமல் ஆக்கப்பட்டோர் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையக்கூடும்.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வடகிழக்கில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் விடையில்லா வினாவுடன் வாழ்கின்றன.

கைது செய்யப்பட்டவர்கள், கடத்தப்பட்டவர்கள், கப்பம் கோரப்பட்டவர்கள், பின்னர் ஒருபோதும் வீடு திரும்பாதவர்கள். அவர்களின் தாய்மார்கள் முதுமையடைந்தனர். 

அவர்களின் பிள்ளைகள் பெற்றோரை காணாமலே வளர்ந்தனர். ஆனால் நீதிக்கான தேடல் மட்டும் நிற்கவில்லை. ஆரம்பத்தில் சில கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களை மையமாகக் கொண்டு தொடங்கப்பட்ட குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகள், இன்று மிகப் பெரிய குற்ற வலையமைப்பை நோக்கிச் செல்கின்றன. 

கொழும்பு, பொலன்னறுவை, மலையகம், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தடயங்கள் இந்த விசாரணைகளின் வழியாக ஒன்றோடொன்று இணைந்துவருகின்றன.

சாட்சியங்களின் அடிப்படையில், கன்சைட் முகாமில் சட்டவிரோதமாக மக்கள் தடுத்து வைக்கப்பட்டதாகவும், நிலத்தடி தடுப்பு அறைகள் பயன்படுத்தப்பட்டதாகவும், சிலர் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

இந்த இடம் தற்போது நீதிமன்ற உத்தரவின் கீழ் பாதுகாப்பு வலயமாக மாற்றப்பட்டுள்ளதுடன், நாளைய நீதவான் ஆய்வு பல ஆண்டுகளாக மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொணரும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கின் திருப்புமுனையாக பல முன்னாள் கடற்படை உயரதிகாரிகளின் பெயர்களும் தொடர்ந்து வெளிவந்தவண்ணமுள்ளன! 

முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன, முன்னாள் கடற்படை புலனாய்வு பிரிவு அதிகாரி நிஷாந்த உலுகெதென்ன, மற்றும் விசாரணைகளில் பெயர் குறிப்பி முடியாத (சாட்சிகளாக மாறியவர்கள்)பிற அதிகாரிகள் தொடர்பிலும் பல்வேறு தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதேபோல், பிறிதொரு காணாமல் ஆக்கப்பட்ட வழக்குகளில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன என்பவரின் பெயரும் விசாரணைகளில் வெளிப்பட்டதாக தகவல்கள் உள்ளன. இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட வேண்டியவை என்பதும் நினைவில் கொள்ளப்பட வேண்டும். 

ஆனால் இங்கு மிக முக்கியமான கேள்வி வேறு ஒன்று. ஒரு இரகசிய தடுப்பு முகாம் இயங்கியிருந்தால் யார் அதைப் பற்றித் தெரிந்திருந்தனர்? அங்கு தடுத்து வைக்கப்பட்டவர்கள் யார்? அவர்கள் இன்று எங்கே? அவர்கள் உயிருடன் வெளியேறினார்களா? அல்லது அவர்கள் இந்த நாட்டின் மண்ணுக்குள் பெயரற்ற புதைகுழிகளில் புதைக்கப்பட்டவர்களா? 

இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தேடும் பயணத்தின் முதல் உறுதியான படியாகவே நான் இந்த முன்னேற்றத்தைப் பார்க்கிறேன்! நீண்ட காலமாக நானும் என்னுடைய குழுவினரும் மேற்கொண்டுவரும் உண்மைத் தேடலுக்கும், காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கான நீதிப் போராட்டத்திற்கும் கிடைத்த முதல் முக்கிய வெற்றி இது. ஆனால் இது முடிவு அல்ல.

இன்னும் பல புதைகுழிகளும் மறுக்கப்பட்ட உண்மைகளைம் உரிமையும் கண்டறியப்பட வேண்டியிருக்குறது. இன்னும் பல சாட்சிகளை பேச வைக்க வேண்டியிருக்கிறது. 

இன்னும் பல அதிகாரிகள் பதிலளிக்க வைக்க வேண்டியிருக்கிறது. இன்னும் பல குடும்பங்கள் தங்கள் உறவுகளின் இறுதி தடயத்தைக் கண்டறிய காத்திருக்கின்றன. 

நாம் பேசுவது வடகிழக்கின் வலியை மட்டும் அல்ல, இந்த நாட்டின் எல்லா பகுதிகளிலும் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொணரும் விசாரணையாக இது மாற வேண்டும். மூன்று தசாப்தங்களாக கண்ணீருடன் காத்திருக்கும் குடும்பங்களுக்கு உண்மை கிடைக்க வேண்டும். 

குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டும். நீதியை தாமதப்படுத்தலாம். ஆனால் உண்மையை நிரந்தரமாக புதைத்து வைக்க முடியாது. நாளைய நீதவான் விஜயம், ஒரு இடத்தை ஆய்வு செய்யும் நிகழ்வு மட்டுமல்ல.

அது எங்களது காலசூழலை எமக்கு சாதகமாக்கி என்னுடன் கைகோர்த்து தடம் அறிய பயணிக்கும் சிங்கள தமிழ் முஸ்லிம் நண்பர்களின் தேடலை அடுத்த படிக்கு எடுத்து செல்லும் அடுத்த பாய்ச்சலே இது! அது இந்த நாட்டின் மறைக்கப்பட்ட மறுக்கப்பட்ட நீதியின் கதவினை திறக்கக்கூடிய வாய்ப்பாக்கூட அமையலாம்!

தகவல்:

செல்வக்குமார் கமல நாதன்

நன்றி

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4