நாட்டில் தீவிரமான சுகாதாரப் பிரச்சினையாக உருமாறி வரும் தோல் நோய் தொற்று - மருத்துவர்கள் எச்சரிக்கை!
தோல் நோய்கள் ஒரு தீவிரமான சுகாதாரப் பிரச்சனையாக மாறியுள்ளதாகவும், இதற்காக சிகிச்சைப் பெறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும். தோல் மருத்துவ நிபுணர் நயானி மதரசிங்க தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்றபோது, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், "தோல் நோய்கள் மிகவும் பொதுவானவை. உலகில் சுமார் 4 மில்லியன் மக்கள் தோல் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை தரவுகள் உறுதிப்படுத்தியுள்ளன. இலங்கையில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூற தரவுகள் இல்லை என்றாலும், தோல் நோய்கள் ஒரு தீவிரமான சுகாதாரப் பிரச்சனையாகும்.
ஒரு நோயாளிக்கு தோல் நோய்கள் குறித்த முறையான அறிவு இல்லாதபோது, அவர்கள் தவறான சிகிச்சைகளை நாடக்கூடும். இது நோயை மேலும் மோசமாக்கவும் கூடும். தோல் நோய்கள் தொற்றக்கூடியவை என்று பலர் நினைக்கிறார்கள். இருப்பினும், தோல் நோய்கள் தொற்றக்கூடியவை அல்ல. இந்தத் தவறான கருத்து நோயாளிகளுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது”என்றார்.
இதேவேளை மருத்துவ அனுமதியின்றி தோல் நோய்களுக்கான மருந்துகளை எடுத்துக்கொள்வது, இந்த நோய்களைக் கட்டுப்படுத்துவதில் சிக்கல்களை உருவாக்கியுள்ளது என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.
நாட்டில் டின்யா (படலப்புழு) என்ற பூஞ்சை நோய் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேநேரம், தோல் சிகிச்சை மையங்களுக்கு வரும் நோயாளிகளில் சுமார் 20 சதவீதமானோருக்கு இந்தப் பூஞ்சைத் தொற்று உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே