வடமராட்சிக் கிழக்கில் சிறப்பு அதிரடிப்படையினர் வெளியேற்றம் – மக்கள் மத்தியில் கேள்வி!
யாழ்ப்பாணம், வடமராட்சிக் கிழக்கு, நடுக்குடத்தனை பகுதியில் அமைந்திருந்த சிறப்பு அதிரடிப்படையினரின் முகாம் திடீரென அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொதுநோக்கு மண்டபத்தில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த முகாம் இயங்கி வந்துள்ளது.
எனினும், முகாம் இயங்கி வந்த காலப்பகுதியிலும் நாளாந்தம் நான்குக்கும் மேற்பட்ட டிப்பர் வாகனங்களில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது சிறப்பு அதிரடிப்படையினர் முகாமிலிருந்து வெளியேறியுள்ளமை அப்பகுதியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
முகாம் அகற்றப்பட்டமைக்கான காரணம் மற்றும் அப்பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வைக் கட்டுப்படுத்துவதற்காக இனி முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.