ஒலிம்பிக் போட்டிகளுக்கு பார்வையாளர்கள் வர தடை : டோக்கியோவில் அவசரநிலை அறிவிப்பு!!
டோக்கியோவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து இருப்பதால் அவசர கால நிலையை அறிவிக்க ஜப்பான் அரசு உத்தரவிட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளை பார்வையாளர்கள் இன்றி நடத்தவும் அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23ம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக இந்தியாவில் இருந்து 120க்கும் மேற்பட்ட வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.இந்த நிலையில் போட்டி நடைபெற உள்ள டோக்கியோவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது ஜப்பான் அரசை கவலை அடைய செய்துள்ளது. இதனால் டோக்கியோவில் அவசரகால நிலையை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் மூலம் புதிய கொரோனா அலை உருவாகாமல் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.இந்த நிலையில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளை ஜப்பானில் நடத்துவதற்கு அந்நாட்டில் கடுமையான எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளை ரத்து செய்ய வேண்டும் அல்லது தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.ஒலிம்பிக் போட்டிகளை தள்ளிவைக்க போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், டோக்கியோ பெருநகர பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதனால் அவசர நிலையை அறிவிக்க ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது.நோய் தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் முழுமையாக கடைப்பிடித்து அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று ஜப்பான் பிரதமர் யோசிஹைட் சுகா கோரிக்கை விடுத்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை காண பார்வையாளர்களுக்கு தடை விதிக்கவும் ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது.டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்கள் ஏற்கனவே வெளிநாட்டு பார்வையாளர்களை தடை செய்துள்ளனர்.உள்நாட்டு பார்வையாளர்களுக்கு 50% மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கலாம் என்று திட்டமிட்டு இருந்தனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் அவசரநிலை அறிவிக்கப்பட்டதால் ஒலிம்பிக் போட்டிகள் அனைத்தையும் பார்வையாளர்கள் இன்றி நடத்த முடிவு செய்யப்பட்டது.பார்வையாளர்கள் இன்றி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என்பதை டோக்கியோ ஒலிம்பிக் அமைச்சர் உறுதி செய்துள்ளார்.