வைகை புயல் வடிவேலுவின் பிறந்தநாள் இன்று!
வைகைப் புயல் வடிவேலு, 1960 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் நாள் மதுரையில் பிறந்தார். அவரது தந்தை நடராச பிள்ளை, தாயார் வைத்தீஸ்வரி. 1991 ஆம் ஆண்டு கஸ்தூரிராஜாவின் இயக்கத்தில், ராஜ்கிரண் தயாரித்து, கதாநாயகனாகவும் நடித்த ‘என் ராசாவின் மனசிலே’ என்ற திரைப்படத்தில் முதன் முதலாக ஒரு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். அந்த படத்தில் ‘போடா போடா புண்ணாக்கு’ என்ற பாடலையும் பாடினார்.
இதனால், தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே ஒரு நடிகனாகவும், பாடகனாகவும் தன்னுடைய பெயரைத் தமிழ் சினிமாவில் பதிவு செய்தார். அதன்பிறகு கமல், ரஜினி உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நகைச்சுவை கதாபாத்திரங்களில் அசத்தினார்.
1991 ஆம் ஆண்டு தொடங்கி 2005 வரை பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துவந்த இவர், 2006 ஆம் ஆண்டு இயக்குனர் சங்கரின் தயாரிப்பில் சிம்புதேவனின் இயக்கத்தில் வெளிவந்த ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ என்ற திரைப்படத்தில் முதன் முதலாக இரட்டை வேடங்களில் கதாநாயகனாக நடித்தார். இதில் இவர் ஏற்று நடித்த இரண்டு கதாபாத்திரங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
வரலாற்று பின்னணியை கதையாக கொண்டு முழு நீள நகைச்சுவை திரைப்படமாக உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றுத் தந்தது. அதன் பிறகு, 2008 ஆம் ஆண்டு தம்பி ராமையா இயக்கத்தில் ‘இந்திரலோகத்தில் நா அழகப்பன்’ என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்தார்.
மேலும் தற்போது நடிக்க தடை நீக்கப்பட்ட நிலையில் வடிவேலு பல படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார் என தகவல் வந்துள்ளது.
இந்நிலையில் வடிவேலுவின் பிறந்தநாளை ரசிகர்கள் செம விமர்சையாக கோலாகலமாக இணையத்தில் புகைப்படங்களை பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர்.