சந்திரமுகி 2 பாகத்தில் ஜோதிகாவிற்கு பதிலாக அனுஷ்காவை உறுதி செய்த படக்குழு
சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் ஜோதிகாவின் வேடத்தில் நடிகை அனுஷ்கா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான படம் சந்திரமுகி. நகைச்சுவை கலந்த திகில் படமாக உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் ரஜினி வேடத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். சந்திரமுகியின் முதல் பாகத்தில் ரஜினிகாந்த் வேடத்தை விட ஜோதிகாவின் வேடத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கும்.
இதனையடுத்து இரண்டாம் பாகத்தில் ஜோதிகாவின் வேடத்தில் நடிப்பது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது. இந்த நிலையில் ஜோதிகாவின் வேடத்தில் அனுஷ்கா நடிக்கவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
முன்னதாக சந்திரமுகி திரைப்படத்தில் வேட்டையன் சம்மந்தப்பட்ட காட்சிகள் மிகக் குறைவாகவே இடம் பெற்றிருக்கும். ஆனால் சந்திரமுகி 2வில் முழுக்க முழுக்க வேட்டையன் வேடத்தை மையப்படுத்தியே கதையமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.