பரத்தின் ''நடுவன்'' விமர்சனம்
நடிகர் | பரத் |
நடிகை | அபர்ணா வினோத் |
இயக்குனர் | ஷாரங் |
இசை | தரண் |
ஓளிப்பதிவு | யுவா |
கொடைக்கானலில் பரத்தும் அவரது நண்பர் கோகுல் ஆனந்தும் சேர்ந்து தேயிலை தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார்கள். கோகுல் ஆனந்த், ஒரு முழு நேர குடிகாரர் என்பதால், பரத் தான் அங்கு அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டு செய்கிறார். . பரத்துக்கு ஒரு மனைவியும், பெண் குழந்தையும் இருக்கிறார்கள்.
பரத்தின் மனைவி அபர்ணா வினோத்தும், நண்பன் கோகுல் ஆனந்தும் கள்ளக் காதலர்கள். இந்த விவகாரம் பரத் வீட்டில் தங்கி வேலை பார்க்கும், உறவுக்கார இளைஞர் அருவி பாலாவுக்கு தெரிந்துவிடுகிறது. இதையடுத்து அவரை கோகுல் ஆனந்த் மிரட்டி வைக்கிறார். இறுதியில் கள்ளக் காதல் விவகாரத்தை பரத்திடம் பாலா சொன்னாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
தேயிலை தொழிற்சாலை முதலாளியாக பரத் நடித்திருக்கிறார். கம்பெனியே கதி என கிடக்கும் அப்பாவியான கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். பரத்தின் மனைவியாக, நடித்துள்ள அபர்ணா வினோத் கொடுத்த வேலையை திறம்பட செய்துள்ளார். பரத்தின் நண்பராக நடித்துள்ள கோகுல் ஆனந்த், குடிகாரர், கள்ளக் காதலர் என வில்லன் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.
இயக்குனர் ஷாரங், கதாபாத்திரங்களை தேர்வு செய்துள்ள விதம் அருமை. ஆரம்பத்தில் மெதுவாக நகரும் திரைக்கதை, அபர்ணா, கோகுல் கள்ளக் காதல் விவகாரம் தெரிய வந்த பிறகுதான் வேகம் எடுக்கிறது. பலரும் தங்கள் உண்மை முகங்களை மறைத்து வேறொரு முகத்தைக் காட்டித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை ஒரு பரபரப்பான திரில்லராக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர். இதை இன்னும் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம்.
திரில்லர் படங்களுக்குப் பின்னணி இசைதான் பக்கபலமாக இருக்கும். ஆனால் இப்படத்தில் அது சரிவர அமையாதது பின்னடைவு. தரண் இசையில் பாடல்கள் மனதில் பதியவில்லை. ஒளிப்பதிவாளர் யுவாவின் ஒளிப்பதிவு கொடைக்கானலின் அழகை கண்முன் கொண்டு வந்திருக்கிறது.