மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்துவதற்கு தீர்மானம்

Prabha Praneetha
2 years ago
மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்துவதற்கு தீர்மானம்

மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்துவதற்குத் தேவையான சட்டரீதியான திருத்தங்களை துரிதமாக மேற்கொள்வதற்கு தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்கும் பாராளுமன்ற விசேட குழு தீர்மானித்தது.

பாராளுமன்ற விசேட குழுக் கூட்டம் அதன் தலைவர் சபை முதல்வர், அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் அண்மையில் (08) நடைபெற்றது.

மூன்று வருடங்களுக்கு மேலாக மாகாண சபைகள் செயற்படாமல் இருப்பதால் இதுவரை நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டிருப்பதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற விசேட குழுவில் சுட்டிக்காட்டினார்.

மாகாண சபைகள் தற்பொழுது ஒருவரினால் நிர்வகிக்கப்படுவது நியாயமானது அல்ல. தற்பொழுது உள்ளூராட்சி மன்றங்களும் பாராளுமன்றமும் செயற்படுகின்றன.

மாகாண சபைகள் மாத்திரமே செயற்படாத நிலையில் காணப்படுகின்றன. இதனால் மாகாணசபைத் தேர்தல்களை விரைவில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் நிதி அமைச்சர் வலியுறுத்தினார்.

மாகாண சபை தேர்தலை நடத்தத் தேவையான சட்டத் திருத்தங்களை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பாராளுமன்றத்தில் முன்வைப்பது பொருத்தமானது என பாராளுமன்ற விசேட குழுவின் தலைவர், சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

அந்தத் திருத்தங்களை மேற்கொள்ளும் போது நியாயமான பெண் பிரதிநிதித்துவம் வரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.


உள்ளூராட்சி மன்றங்களில் தற்பொழுது காணப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கருத்தாகும் என நிபுணர்கள் குழுவின் தலைவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சுதந்த லியனகே சுட்டிக்காட்டினார்.

தொகுதி எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் அதனை மேற்கொள்வது பிரயோகரீதியானது அல்ல என்றும், விகிதாசார பிரதிநிதித்துவ முறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதியிலிருந்தே உறுப்பினர்கள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோன்று தொகுதிவாரி மற்றும் விகிதாசார பிரதிநிதிதித்துவம் ஆகிய இரண்டு பகுதிகளிலுமிருந்து உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று நிபுணர்கள் குழுவின் சில உறுப்பினர்கள் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

பெண் பிரதிநிதித்துவத்தை 25 வீதமாக பேணுவது நல்லது. பாராளுமன்றம் மற்றும் மாகாண சபை தேர்தல்களை ஒரே முறையின் கீழ் நடத்துவது பொருத்தமானது. பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 225 ஆக பேணுவது சிறந்தது.

பாராளுமன்றத்துக்கு தேசியப்பட்டியல் உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பில் சரியான முறைமை ஒன்று தயாரிக்கப்பட வேண்டும் எனவும் பேராசிரியர் சுதந்த லியனகே குழுவில் சுட்டிக்காட்டினார்.

இந்தக் குழுக் கூட்டத்தில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி. சில்வா, பவித்ராதேவி வன்னிஆரச்சி, பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்துமபண்டார, அனுர திசாநாயக்க, மனோ கணேஷன், எம்.ஏ. சுமந்திரன், மதுர விதானகே, சாகர காரியவசம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் எல்லை நிர்ணய ஆணைக்குழு அதிகாரிகளும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

பாராளுமன்ற விசேட குழுவின் அடுத்த கூட்டம் எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறுமென இக்குழுவின் செயலாளரும், பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹனதீர தெரிவித்தார்.