உடன்பிறப்பே – திரைவிமர்சனம்

Prabha Praneetha
2 years ago
உடன்பிறப்பே – திரைவிமர்சனம்

நடிகர் – சசிகுமார்
நடிகை – ஜோதிகா
இயக்குனர் – இரா.சரவணன்
இசை – இமான்
ஒளிப்பதிவு – வேல்ராஜ்

சசிகுமாரும், ஜோதிகாவும் அண்ணன் தங்கை. ஜோதிகாவிற்கும் சமுத்திரகனிக்கும் திருமணம் நடைபெறுகிறது. வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கும் சமுத்திரகனி, ஒரு பிரச்சனையில் ஜோதிகாவை அழைத்து சென்று விடுகிறார். இதனால், அண்ணன் சசிகுமாரும், தங்கை ஜோதிகாவும் பிரிந்து பேச்சுவார்த்தை இல்லாமல் இருக்கிறார்கள்.

இறுதியில் இரண்டு குடும்பமும் ஒன்று சேர்ந்ததா? பிரிய காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் அண்ணன் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் சசிகுமார். ஊர் மக்கள் பிரச்சனையில் தலையிடுவது, அடிதடி என்று கெத்தாகவும், தங்கைக்காக விட்டுக்கொடுக்கும் பாசமிகு அண்ணனாகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

தங்கையாக வரும் ஜோதிகா பல இடங்களில் முதிர்ச்சியான நடிப்பை கொடுத்து இருக்கிறார். இவரது அறிமுக காட்சி சிறப்பு. அண்ணன் மீதான பாசத்தில் இவரது செயல்கள் உணர்ச்சிப்பூர்வமாக இருக்கிறது.

ஆசிரியராக மனதில் பதிகிறார் சமுத்திரகனி. சாதுவாக இயல்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார். வழக்கமான சமுத்திரகனியாக இல்லாமல் வித்தியாசமாக நடித்து கவர்ந்திருக்கிறார். சூரியின் காமெடி காட்சிகள் படத்திற்கு பலம். அதுபோல் கலையரசன் நல்லவனாகவும், கெட்டவனாகவும் நடித்து அசத்தி இருக்கிறார். சசிகுமாரின் மனைவியாக வரும் சிஜா ரோஸ் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்.

அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் இரா.சரவணன். பல இடங்களில் சென்டிமென்ட் காட்சிகள் ரசிக்க வைத்தாலும், சில இடங்களில் என்னப்பா இது என்று சலிப்படைய வைக்கிறது. ஒரு கட்டத்தில் மெகா சீரியல் போல் திரைக்கதை நகர்கிறது.

இமான் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்து இருக்கிறார். கிராமத்து அழகு மாறாமல் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் வேல்ராஜ்.